கொரோனாவுக்கு எதிரான 'போரில்' வென்று விட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த பிரதமர்... 'கட்டுக்குள்' கொண்டு வந்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 11, 2020 12:16 AM

உலக நாடுகள் கொரோனாவை எதிர்க்க திணறிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், நியூசிலாந்து நாடு கொரோனாவை வென்று விட்டதாக அறிவித்துள்ளது.

How did Succeed New Zealand in Coronavirus battle?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் இதுவரை சுமார் 1லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஊரடங்கு, சமூக விலகல் போன்றவற்றை தற்போது உலக நாடுகள் அனைத்தும் கடைபிடித்து வருகின்றன.

இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாகவும், விரைவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்க்க திணறிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் நியூசிலாந்து நாடு கொரோனாவை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட போதே உலக சுகாதார அமைப்பு சமூக விலகல் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால் உலக நாடுகள் பெரிதாக எந்தவித அக்கறையும் காட்டவில்லை. அதே நேரம் இந்த எச்சரிக்கையால் சுதாரித்துக்கொண்ட நியூசிலாந்து நாடு ஜனவரி 22-ம் தேதியில் இருந்து கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஆரம்பித்தது.

அப்போது நியூசிலாந்து நாட்டில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் நபர் நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து தீவிரம் காட்ட ஆரம்பித்தது. முதலாவதாக மார்ச் 14-ம் தேதி முதல் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தது. தொடர்ந்து சொகுசு கப்பல் ஒன்றையும் தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தது. அத்துடன் மார்ச் 19-ம் தேதியில் இருந்து நாட்டின் எல்லையை மூடியது.

இதனால் மார்ச் 18-ந்தேதி வரை வெளிநாட்டைச் சேர்ந்த 32 பேருக்குத்தான் கொரோனா இருந்தது. அதன்பின் மின்னல் வேகத்தில் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது. மார்ச் 26-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. வருகின்ற 20-ம் தேதி வரை நியூசிலாந்து நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கையால் நேற்று வரை அங்கு 992 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, ''கடுமையான கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸின் செயின் பரவலை உடைத்து எறிந்து விட்டோம். கொரோனா காலடி எடுத்து வைத்த 6 மாதங்களுக்குள் அதை முறியடித்து விட்டோம். நியூசிலாந்து மக்கள்தான் கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுத்தனர். ஒவ்வொரு நபரும் இதைச் செய்தனர். அதே வழியில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை தொடர்வதா? அல்லது ஊரடங்கை தளர்த்துவா? என்பது குறித்து ஏப்ரல் 20-ம் தேதி முடிவு செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக நார்வே, தைவான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அறிவித்து இருந்தன. அந்த பட்டியலில் தற்போது நியூசிலாந்து நாடும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என நாம் ஒவ்வொருவரும் மனமார வேண்டிக்கொள்வோம்!