‘ஆசையாக குளிக்கச் சென்ற சிறுமிகள்’... 'தாமரைக் கொடியில் சிக்கி நேர்ந்த துக்கம்'... 'கதறித் துடித்த குடும்பம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமிகள் 2 பேர் தாமரைக் கொடிகளில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகள் பவதாரணி (17), ராயப்பன் மகள் பிரியா (16). இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் இந்தப் பகுதியில் உள்ள வெளிவயல் ஏரியில் குளிப்பது வழக்கம். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளநிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறுமிகள் இருவரும் ஆசையாகக் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, வழக்கத்தை விடவும் சற்றே கூடுதல் தூரத்திற்குச் சென்று குளித்தாகத் தெரிகிறது. அங்கு படர்ந்து இருந்த தாமரைச் செடிக்குள் இருவரின் கால்களும் மாட்டிக் கொண்டாதால், வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது, ஏரிப்பகுதிக்கு யாரும் வராததால், தண்ணீரில் இருவரும் மூழ்கினர். நீண்ட நேரமாக சிறுமிகளை காணவில்லை என குடும்பத்தினர் தேடியப்போது, ஏரியில் படர்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிறுமிகள் இருவரும் சிக்கி இருப்பதை பார்த்து இருவரையும் மீட்டு மீமிசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொன்னத்தைக் கேட்டு சிறுமிகளின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இருவரின் உடல்களையும் வீட்டுக்கு எடுத்து வந்த குடும்பத்தினர், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 10-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டு இருவரின் உடலையும் அடக்கம் செய்தனர். இதுபற்றி ஆவுடையார்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.