'நாங்கள் தகவல்களை மறைத்தோம் என்று சொல்வது வெட்கங்கெட்ட பொய்!'... அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு கடுமையாக கொந்தளித்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த டிசம்பர் மாதம், சீனாவில் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து வேகமாகப் பரவியுள்ளது, ஆனால் ஜனவரி 16ம் தேதி வரை பலிகள் எண்ணிக்கை இல்லை என்று கூறி வந்ததோடு மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் அபாயகரமான வைரஸ் என்ற உண்மையையும் மறைத்து உலக நாடுகளுக்கு சீனா பெரிய துரோகம் இழைத்து விட்டது என்று உளவுத்துறை தகவல்களை வைத்து அமெரிக்கா சீனாவைக் கடுமையாகச் சாடியது.
மேலும் சீனா கூறும் பலி எண்ணிக்கை பொய்யானது என்றும், அதைவிட அதிகமான பலிகள் அங்கு இருக்கும் எனவும் ட்ரம்ப் முதற்கொண்டு அனைத்து அரசியல்வாதிகளும் கடுமையாகச் சாடினர்.
இதையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன்யிங் ஹுவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “சீனா மிகவும் வெளிப்படையாக உரிய நேரத்தில் கொரோனா தகவல்களை உலகுக்கு அளித்தது.
பன்னாட்டு பொது சுகாதார பாதுகாப்பு குறித்து உலக சுகாதார அமைப்பும், கொள்ளை நோய், தொற்று நோய் நிபுணர்களும்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அமெரிக்க அரசியல்வாதிகள் அல்ல, ஏனெனில் இவர்கள் இயல்பாகவே பொய்யர்கள். பொய்கூறியே பழக்கப்பட்டவர்கள்.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவரே சீனா மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சீனா கொரோனா மீது மக்கள் நலன்களுக்காக விரைவு கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, உலக அளவில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தகவல்களை அவ்வப்போது அளித்துக் கொண்டுதான் இருந்தது.
அமெரிக்கா திண்டாடுகிறது என்பதை வருத்தத்துடன் புரிந்து கொள்கிறோம். அதன் சுகாதார அதிகாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்கிறோம், அமெரிக்க மக்களின் கடினமான நிலைக்காக உண்மையில் வருந்துகிறோம்.
மேலும், மனிதாபிமான உணர்வில் சீனா எங்களால் முடிந்த உதவியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கவே தயாராக உள்ளது.
ஆகையால், கொரோனாவுக்கு எதிரான போரில் பொறுப்பாகச் செயலாற்ற வேண்டிய நேரமே தவிர குற்றம்குறை காண்பதில் நேரத்தை அமெரிக்கா செலவிடுதல் கூடாது. அரசியலுக்கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் முக்கியம். பொதுமக்கள் சுகாதார விவகாரத்தை அறமற்ற முறையிலும் வெட்கங்கெட்ட முறையிலும் அரசியலாக்கக் கூடாது. இது அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் கண்டனங்களையும் ஈர்த்து விடும்" என்றார்.