'இத விட்டா நல்ல சான்ஸ் இல்ல'...'டேப்லெட் போட்டுட்டு தூங்க போன தம்பதி'... காலையில் காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தி 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட். துறைமுக ஊழியரான இவர், தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு, உணவு சாப்பிட்ட பின்பு, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின்பு வீட்டின் அனைத்து அறை கதவுகளையும் பூட்டிவிட்டு வந்த ஜான்சி, கணவருடன் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ இருந்த அறை கதவு திறந்து கிடந்துள்ளது. இரவு எல்லா அறையையும் பூட்டிவிட்டு தானே தூங்க சென்றோம் என்ற சந்தேகத்தில், பீரோ இருந்த அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருள்கள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. இதனால் பதறி போன அவர், பீரோவுக்குள் இருந்த நகைகளை தேடி பார்த்துள்ளார்.
அப்போது தான் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் ஆடிப்போன அவர் கதறி துடித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த வின்சென்ட், மனைவியை தேற்றி விட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீஸ் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் மோப்பநாய் மோப்பம்பிடித்தப்படி சிறிது தூரம் சென்று விட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவால் வெளியில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் உள்ள பகுதியில், 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
