‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், ‘கொடிய வைரஸ் நோய் தொற்றியுள்ளது. இந்திய அளவில் பல மாநிலங்களில் வைரஸ் நோய் பரவியுள்ளது. தமிழகத்திலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒடிஷா, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கையை அந்தந்த மாநில அரசுகள் பரிசீலப்பதாக கூறுயுள்ளன. அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவர எந்தவித தடையும் இல்லை. பல மளிகைப்பொருட்கள் வேறு மாநிலங்களிலிருந்து வரவேண்டியுள்ளது. அதைக் கொண்டு வரும் லாரிகள் அதிகம் இயக்கப்படுவதில்லை. அதனால் மளிகைப்பொருட்கள் தட்டுபாடு உள்ளது. பிரதமர் அத்தியாசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் அதிகமாக வெளியே சுற்றுகிறார்கள். இது கொடிய தொற்று நோய். அது எப்படி பரவுகிறது என்பதை அனைவரும் பார்க்கிறீர்கள். ஆனால் சிலர் அந்த நோயின் தீவிரம் பற்றி அறியாமல், புரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். ஊடகங்கள் மூலமாக நான் கேட்டுகொள்வது, இது ஒரு மோசமான நோய், அதற்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ஊரடங்கை கடைபிடிக்க ஒத்துழையுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை அதிகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமும் பொருட்களை வாங்க வெளியே வராதீர்கள். வாரம் ஒருமுறை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறோம். ஆனால் அதை கடைப்பிடிகாதபோதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு தரவேண்டுமோ அந்த அளவிற்கு ஒத்துழைப்பு தருகிறோம். பொதுமக்கள் அதை மதிக்க தவறினால் உங்களைப் பாதுக்காக்க ஊரடங்கு உத்தரவை கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக இனி சட்டம் தன் கடைமை செய்யும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. டோக்கன் வழங்கும்போதே 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த மாத இறுதிவரை ரேசன் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். 21 நாள்கள் ஊரடங்கு முடிந்த பிறகே பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.