'நமக்கு புடிச்சவங்கள கடைசியா ஒரு தடவ பார்க்க முடியாதது எவ்வளவு கொடுமை!?'... மரணத்தை மிஞ்சிய வலிகளைக் கொடுக்கும் கொரோனா!... இதயத்தை நொறுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 03, 2020 07:29 PM

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் உடலை இறுதியாக அவர்களின் உறவினர்கள் பார்க்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

relatives not allowed to see their loved ones in italy

இத்தாலியில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 13,915 ஆக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அந்நாடு கடுமையாகப் போராடி வருகிறது.

வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது ஒரு பக்கம் என்றால், அப்படி இறப்பவர்கள் இறுதியாக தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்கக் கூட முடியாத நிலை ஏற்படுவது இறப்பையும் தாண்டிப் பெரும் அவலமாக உள்ளது. இத்தாலியின் பெர்கோமோவைச் சேர்ந்த ரென்ஸோ சார்லோ டெஸ்டா என்ற 85 வயது முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். இவர் இறந்து அடுத்த ஐந்து நாட்கள் ரென்ஸோவின் உடல் சவப்பெட்டியிலேயே இருந்தது. அங்கு உயிரிழப்புகள் அதிக அளவில் இருப்பதால் இறந்தவர்களின் உடலைப் புதைக்கக் கால தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், ரென்ஸோவின் மனைவி ஃப்ரான்கா (50) தன் கணவரின் இறுதிச் சடங்கை தங்கள் முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களையும் முறையாகச் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால், தற்போது அங்கு இறந்தவர்களின் உடலுக்குப் பாரம்பரிய சடங்குகள் செய்வது சட்டவிரோதமாகியுள்ளது. இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று. உயிரிழந்தவர்களின் முகங்களை இறுதியாகப் பார்ப்பதற்குக் கூட குடும்பத்தினருக்கு அனுமதியில்லை. இந்தச் சம்பவங்கள் மார்ச் மாதம் மத்தியில் நடந்தவை என்றாலும் அங்கு தற்போதுவரை இதே நடைமுறைகளே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு நாளுக்குப் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. ஆள் அடையாளம் தெரியாமல் கல்லறை காலியாக உள்ள இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படுக்கிறது. முன் எப்போதும் இல்லாத சூழல் தற்போது இத்தாலியில் நிலவுவதால் இறந்தவர்களுக்கு குடும்பத்தினர் செய்யும் அனைத்துப் பணிகளையும் கல்லறை பராமரிப்பாளர்களே செய்கின்றனர்.

அன்பானவர்கள் உயிரிழந்தது பெரும் சோகம் என்றால், இறுதிவரை அவர்களைப் பார்க்க முடியாதது அதைவிட பெரிய சோகமாக உள்ளது. இதன் காரணமாகவே இத்தாலியில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஒரேநாளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் கல்லறைப் பணியாளர்களும் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

விடாமல் துரத்தும் கொரோனாவினால் ஏற்கெனவே இத்தாலியின் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. இதனால் 60 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் இந்த நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரிழப்பு, அவர்களின் முகங்களைப் பார்க்கக் கூட முடியாத சூழல் அனைத்தும் இத்தாலி மக்களுக்கு கொடுமையிலும் பெரும் கொடுமையாக உள்ளது.

 

Tags : #CORONA #CORONAVIRUS #ITALY #COVID19 #PANDEMIC