'கொரோனா பரவலுக்கு இது தான் காரணமா?'... டெல்லி நிஜாமுதீன் சம்பவம் குறித்து!... அமெரிக்கா பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 03, 2020 04:42 PM

கொரோனா வைரஸை மதச் சிறுபான்மையினர்தான் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது. இந்தக் குற்றம் சாட்டுதலால் உண்மையில் அதற்கு அனுமதிக்கும் அரசு உலகத்தால் பின்னோக்கித் தள்ளளப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் வேதனை தெரிவித்துள்ளார்.

america comment on delhi nizamuddin for covid19 outbreak

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின், அதற்கு மத ரீதியாக சிலர் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வரும் சூழலில் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்தான தூதர் சாம் பிரவுன் பேக் வாஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மத ரீதியான குழுக்கள் தங்களுக்கு இடையே சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். அதுதான் இப்போது அவசியமான ஒன்று. அதேசமயம் உலகம் முழுவதும் மதரீதியான குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும். குறிப்பாக ஈரான், சீனா நாடுகள் அந்தக் குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கும், மதத்தையும் தொடர்புபடுத்தி பேசும் நாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக பல இடங்களில் இதுபோன்று நடக்கிறது. இதுபோன்ற கருத்துகளுக்கு அரசே ஆதரவு அளிப்பது தவறானது. உடனடியாக இதுபோன்ற பேச்சுகளுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா வைரஸ் இதுபோன்ற வழிகளில் பரவாது, மதத்துக்கும் கொரோனா வைரஸுக்கும் தொடர்பில்லை என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த கரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது, உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது என்று நமக்குத் தெரியும். இது மதச் சிறுபான்மை மக்கள் மூலம் பரவவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற பேச்சுகள், சம்பவங்கள் உலகில் பல இடங்களில் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்கும், பேச்சுகளுக்கும் அரசு அனுமதியளித்தால் அந்த நாடு உலகத்தால் பின்னோக்கித் தள்ளப்படும்.

இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையுடன் இணைந்து பணியாற்றி, தேவையான உதவிகளைப் பெற வேண்டும். பல நாடுகளில் இதுபோன்ற கடினமான நேரங்களில் சிறுபான்மை மக்களுக்குப் பொது மருத்துவம் தேவையான அளவுக்கு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறார்கள். அனைத்துச் சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்தி, அவர்களுக்கு மருத்துவ வசதிகளையும், வளங்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்''.

இவ்வாறு பிரவுன்பேக் தெரிவித்தார்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #CHINA #USA #DELHI #INDIA