‘ஃபேஸ்புக் மூலம் பழகி, ஏமாற்றிய இளைஞர்’... ‘காதலியின் தந்தை செய்த அதிர்ச்சி காரியம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 17, 2019 11:05 AM
ஃபேஸ்புக் மூலம் மகளிடம் பழகி, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மூத்த மகள் 23 வயதான சக்திபிரியா. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரன்சுடன் பழக்கம் ஏற்பட்டது. லாரன்ஸ் அம்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். சக்திபிரியா லாரன்சுடன் பழகுவதை அறிந்த அவரது பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். லாரன்ஸ் மீது பல முறை சக்திபிரியா போலீசில் புகார் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில், அவர் அளித்த ஒரு புகாரில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ், சிறையில் இருந்து வெளிவந்ததும், சக்தி பிரியாவை விட்டு முழுவதுமாக விலகியதாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமையன்று லாரன்ஸ் கடைக்கு சக்திவேல் சென்று, தனது மகளுடன் சேர்ந்து வாழும்படி கூறினார்.
இதில் அவருக்கும் லாரன்சுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாரன்சை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். காயமடைந்த லாரன்சை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சக்திவேல் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.