‘சென்னை பெட்ரோல் பங்க்கில் தாக்குதல்’... 'கத்தி, அரிவாளுடன்'... 'பதைபதைக்க வைத்த வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 15, 2019 11:51 AM
சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்கிற்கு, கஞ்சா போதையில் வந்த கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்களை தாக்கி அச்சுறுத்திய பதைபதைப்பூட்டும் சம்பவம் நடந்து உள்ளது.

தாம்பரம் அருகே ஆலப்பாக்கத்தில், பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறன்று இரவு, அந்த பங்கிற்கு கஞ்சாப் போதையில் வந்த கும்பல் ஒன்று, ஊழியர் ஒருவரை கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அங்கிருந்த ஒருவர், போலீசுக்கு தகவல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. போலீஸ் அங்கு வருவதை அறிந்து தப்பி ஓடிய கும்பல், போலீஸ் புறப்பட்டுச் சென்றப் பிறகு, மீண்டும் அங்கு சென்றது. கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி வந்த அவர்கள், போலீசில் தகவல் சொன்னது யார் எனக் கேட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டினர்.
பின்னர் பெட்ரோல் நிரப்ப வந்த ஒருவரை கூம்பு போன்ற வடிவ பொருளை தூக்கி வீசி தாக்கிய கும்பல், கையில் பட்டாக் கத்திகளையும் எடுத்ததால் பதற்றம் நிலவியது. கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொடூரமான சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் என 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதில் ஒரு கோஷ்டியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞரை பெட்ரோல் பங்கில் தேடிவந்த பொது, தேடிய நபர் கிடைக்காத ஆத்திரத்தில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளனர்.
