'ஊரடங்கை' பின்பற்றாமல்... குடும்பத்துடன் 'பிக்னிக்' சென்ற மாணவர்... நொடிப்பொழுதில் 'நேர்ந்த' விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 29, 2020 08:26 PM

நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் அகில். கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

Youngster went out with family for a tour and died

வீட்டிற்கு  வந்த அகில் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து குன்னூர் அருகேயுள்ள மரப்பாலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். மரப்பாலம் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளது என்பதாலும் அப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அந்த தடையையும் மீறி அகில் மற்றும் உடனிருந்தவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

வனப்பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு அங்குள்ள தொங்கு பாலம் அருகே சென்று செல்பி எடுக்க அகில் முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறிக்கொண்ட அகில் போட்டோ எடுக்க முயன்ற போது, கால் தவறி கீழே இருந்த ஆற்றில் விழுந்துள்ளார். இதனைக் கண்ட  உடனிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு கூச்சலிட ஆற்றில் விழுந்த அகில் சூழலில் சிக்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகிலின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு படையினர் சிலரும் போலீசாரும் இணைந்து உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.