‘அம்மாவை பார்க்க 480 கிமீ சைக்கிளில் வந்த மகன்’.. தாயை பார்த்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 29, 2020 11:05 AM

உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க மகன் 480 கிலோமீட்டர் சைக்கிளில் வந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Puducherry man travelled 480 Km in cycle for his sick mother

புதுச்சேரியை சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்த ரேவு ஸ்ரீனியின் தாய் மகாலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதுகுறித்த அவரது உறவினர்கள் மகன் ரேவு ஸ்ரீனிக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே தாயை பார்க்க வேண்டும் என ரேவு ஸ்ரீனி நினைத்துள்ளார்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்து, ரேவு ஸ்ரீனியும், அவரது மனைவியும் தனித்தனியாக சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.

கடந்த 14ம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர்களை வழியில் பல இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்து விசாரித்துள்ளனர். அப்போது தனது தாயின் உடல்நிலை குறித்த தகவல்களை ரேவு ஸ்ரீனி தெரிவித்ததும், போலீசார் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துள்ளனர். வழியில் பல கிராமங்களில் மக்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற உதவிகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 480 கிலோமீட்டர் பயணம் செய்து கடந்த 17ம் தேதி நள்ளிரவு புதுச்சேரி வந்துள்ளனர். அங்கு அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர். பின்னர் 18ம் தேதி தாயை பார்க்க அனுமதி அளித்தனர். உடனே ரேவு ஸ்ரீனி வீட்டிற்கு சென்று உடல்நிலை சரியில்லாத தாயை பார்த்துள்ளார். தனது மகனை பார்த்த சில நிமிடங்களில் தாய் மகாலட்சுமியின் உயிர் பிரிந்தது.

இதனை அடுத்து சோகத்துடன் தாயின் இறுதிச்சடங்கை முடித்து, பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.