‘அம்மா இறந்துட்டாங்கன்னு 8 மணிக்கு சொன்னாங்க’.. ‘ஆனா அதவிட முக்கியமான கடமை ஒன்னு இருக்கு’.. கண்கலங்க வைத்த மகன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 28, 2020 07:09 AM

தாய் உயிரிழந்த செய்தி அறிந்தும் நாட்டுக்காக தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொண்ட நபரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Cleaning worker continue his work after he knows his mother\'s death

கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தாய் இறந்த செய்தியை அறிந்தும் தொடர்ந்து பணியை மேற்கொண்டது குறித்து தூய்மை பணியாளர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் கார்ப்பரேஷனில் அஷ்ரப் அலி என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை காலை அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது அவருடைய தாய் இறந்த செய்தியை அறிந்துள்ளார். வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு செல்ல அவருக்கு நியாயமான காரணங்கள் இருந்தும் அவர் செல்லவில்லை. மதியம் தனது தாயின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘ஒருவருக்கு தாயைவிட மதிப்புமிக்கது ஏதும் இல்லை. என் தாயின் மரணத்தை காலை 8 மணியளவில் நான் அறிந்தேன். ஆனால் என் தாய்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடைமையும் இருந்தது. தாய்நாடு ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் மதியம் என்னுடைய தாயின் இறுதிச் சடங்கிற்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினேன்’ என கண்கலங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் போபால் கார்ப்பரேஷனில் வேலை செய்யும் இர்பான் கான் என்பவர் கடந்த திங்கள் கிழமை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற நாம் அனைவரும் சில தியாகங்களை செய்ய வேண்டும். மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டியுள்ளது. இது அசாதரண காலங்கள்’ என கூறி மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளார்.

Tags : #CORONAVIRUS #CORONA #MADHYAPRADESH #MOTHER #DEATH #CLEANINGWORKER