VIDEO: நாலு நாளா 'சாப்டல' ரொம்ப பசிக்குது...'100-க்கு' போன் செய்த இளைஞர்கள்... 'கலங்க' வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 28, 2020 12:16 AM

பசிக்குது என 100-க்கு இளைஞர்கள் இருவர் போன் செய்து போலீசாரிடம் உதவி கேட்ட சம்பவம் கலங்க வைத்துள்ளது.

Coronavirus: Two youths dial 100, get food from Delhi Police

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தெருவோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோர் உணவின்றி அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே உணவு விநியோகம் செய்து வருகின்றனர். எனினும் ஒருசில இடங்களில் வேலையின்மையால் கூலித்தொழிலாளர்கள் அவதிப்படும் சம்பவமும் நடைபெறத்தான் செய்கிறது.

அந்த வகையில் இளைஞர்கள் இருவர் பசிக்கொடுமையால் 100-க்கு போன் செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. முஹம்மது, பிரசாத் என்னும் அந்த இளைஞர்கள் டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலை செய்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளனர்.

கையில் இருந்த பணத்தை வைத்து நான்கு நாட்கள் பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து பசியை ஆற்றியுள்ளனர். ஆனால் கையில் இருந்த பணமும் தீர்ந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயுள்ளனர். இதையடுத்து 100-க்கு போன் செய்து தங்களின் நிலையை எடுத்து கூறியுள்ளனர். தொடர்ந்து டெல்லி போலீசார் அவர்களின் நிலையை நேரில் சென்று உறுதி செய்து உணவு வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு 1000 ரூபாய் பணமும் அரிசி,பருப்பு போன்ற பொருட்களை வாங்கிக் கொடுத்தும் போலீசார் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டெல்லி காவல்துறை உதவி ஆணையாளர் வழங்கிய பேட்டியில், பணம் இல்லை என்று தெரிந்ததும் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடாமல் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டதை வரவேற்கிறேன் என தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு போலீசார் உதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.