நாங்க 'திருப்பதி' போறோம்... 'ஊர பத்திரமா பாத்துக்கோங்க' ... ஒட்டுமொத்தமாக கிளம்பி திருப்பதி சென்ற ஒரு கிராமத்தின் 'கதை' !
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராம மக்கள், மழைக்காக வேண்டி ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் செட்டிமாராம்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டி, விரதமிருந்து, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செட்டிமாராம்பட்டி மக்கள் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பதினைந்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு கிளம்பினர்.
திருப்பதி புறப்பட்டு செல்வதற்கு முன் கிராமத்தின் பாதுகாப்புக்கு வேண்டி காவேரிபட்டணம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக ஊர் மக்கள் மனு அளித்துள்ளனர். கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட போலீஸார் சார்பில் செட்டிமாராம்பட்டி கிராமத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணி செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கிராமத்து மக்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களை திருப்பதிக்கு வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
