அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பிடித்த ஃபேவரைட் குடும்பம் இதுதான்.. ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 07, 2019 12:07 PM
வாக்காளருக்கு நாட்டின் மதிப்பு தெரியும் என்றால், வேட்பாளருக்குத்தான் ஓட்டின் மதிப்பு தெரியும் எனலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஓட்டும் அரசியலாளர்களின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
100 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவரும் உண்டு, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவரும் உண்டு. அவ்வகையில் ஒரு வீட்டில் ஒரே ஒரு ஓட்டு இருந்தாலே, அந்த வீட்டை இனிப்புக்கு வரும் எறும்பு போல், வேட்பாளர்கள் மொய்ப்பது இயல்புதான். ஆனால் 40 ஓட்டு இருக்கும் வீடு என்றால்? அதுவும் ஒரே குடும்பம் என்றால்? ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது எட்டப்பள்ளி கிராமம். இங்கு 4 தலைமுறைகளாக கூட்டுக்குடும்பமாக வாழும் குண்டேகவுடு குடும்பத்தினர் ஊரில் செல்வாக்கு மிக்கவர்களாகவும், மரியாதை மிக்கவர்களாகவும் வாழ்கின்றனர்.
மொத்தம் 60 பேர் கூட்டாக வாழும் இக்குடும்பத்தில் 40 ஓட்டுக்கள் உள்ளதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இந்த ஊருக்கு வந்தால் இந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்றுவிட முயல்கின்றனர். அதற்கென இந்த வாக்காளர்களிடம் தொடர்ந்து வாக்கு சேகரிக்க அனைத்து கட்சியினரும் வீடு தேடி வந்து மரியாதை நிமித்தமாக வாக்குகேட்டுவிட்டு செல்கின்றனர்.
கூட்டுக்குடும்பமாக வாழும் இக்குடும்பத்தினர் வெளி ஊர்களிலும் வெளிநாடுகளிலும் வேலை நிமித்தமாக தங்கியிருந்தாலும் கூட, தேர்தல் நேரத்தில் தங்களது ஜனநாயகக் கடமைகளை ஆற்றும் விதமாக சொந்த ஊருக்கு வந்துவிடுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.