"நான் பணம் அனுப்ப சொன்னனா?".. 'ஒரே ஒரு வாட்ஸ்ஆப் கால்... ஆதார் ஜெராக்ஸ்!'.. கச்சிதமாக காரியத்தை முடித்த மோசடி மன்னர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த 33 வயதான நபர் கார்த்திக், 2 ஆண்டுகளாக கிளி மூக்கு கோழிகளை வளர்த்து முகநூலில் விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினால், இவர் கோழியை நேரில் கொண்டுபோய் கொடுப்பார். தூரமாக இருப்பவர்களாக இருந்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு, நாமக்கல்லில் இருந்து அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் கோழிப்பண்ணை வண்டிகள் மூலம் கொடுத்து அனுப்புவார். இந்நிலையில்தான், கடந்த மாதம் 26ஆம் தேதி வாட்ஸ்ஆப் கால் மூலமாக கார்த்திக்கை தொடர்பு கொண்ட , பிரதீப் என்பவர் 9,000 ரூபாய்க்கு 2 கோழிகளை விலை பேசி, பணத்தை ஆன்லைனில் செலுத்துவதாகக் கூறி, கார்த்திக்கின் வங்கிக் கணக்கு விபரங்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போட் சைட் போட்டோ ஆகியவற்றை வாட்ஸ்ஆப் மூலம் வாங்கியுள்ளார்.
ஆனால், கார்த்திக், தனது வங்கிக்கணக்கில் பிரதீப் பணம் செலுத்தாததால், கோழிகளை அனுப்பவில்லை. இதனிடையே பிரதீப் அழைத்ததிலிருந்து 3 நாட்கள் கழித்து மதுரையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கார்த்திக்கை செல்போனில் அழைத்து ஏற்கனவே தான் பேசியபடி இரண்டு ஜோடி லெகான் புறாவிற்காக 2,900 ரூபாயை, கார்த்திக்கின் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டதாகவும், ஆனால் புறாவை எப்போது அனுப்புவீர்கள் என்றும் கேட்டுள்ளார்.
அப்போதுதான் அதிர்ந்துபோன கார்த்திக், தான் புறா விற்பனை செய்வதில்லை என்று கூறியுள்ளார், ஆனால் முகநூல் பக்கத்தில் புறா வேண்டும் என பாலமுருகன் கமென்டில் பதிவிட்டதாகவும், அதை பார்த்த கார்த்திக், தன்னுடைய ஆதார், போட்டோ, வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி பணம் அனுப்பச் சொன்னதாகவும் பாலமுருகன் தெரிவிக்க, மேலும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், “நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்று நினைத்துக்கொண்டு, பாலமுருகன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணை வாங்கி, விசாரித்துள்ளார். அந்த முகவரி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்ததும் அது அமர்நாத் என்பவரது கணக்கு என்பதும், தனது ஆதார், போட்டோவை பயன்படுத்தி, அவர் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்ததை அடுத்து கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21 வயதான அமர்நாத் மற்றும் திருச்சியைச் சேர்ந்த 25 வயதான உமர்பாரூக் இருவரையும் சேந்தமங்கலம் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்தனர்.
விசாரணையில், உயர் ரக நாய்குட்டிகள் மற்றும் கோழிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏஜென்டாக உமர் பாரூக் செயல்பட்டு வந்ததும், அதில் போதிய வருமானம் இல்லாதததால், தன்னுடைய நண்பர் அமர்நாத்துடன் சேர்ந்து ஆன்லைன் மூலம் பிரதீப் என்கிற பெயரில் கார்த்திக்கிடம் பேசி அவரது போட்டோ மற்றும் ஆதார் நகலை பெற்றுள்ளது தெரியவந்தது.
அதன் பின்னர் முகநூலில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதில் விளம்பரத்தை போஸ்ட் செய்து மோசடியை தொடங்கியுள்ளனர் இந்த மோசடி மன்னர்கள். பின்னர் இவர்களை கைது செய்த போலீஸார், இவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்பின் தெரியாதவர்களுக்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை, வாட்ஸ்ஆப்பில் அனுப்புவது, எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகிப் போனது.

மற்ற செய்திகள்
