'உங்க கணவருக்கு தோஷம் இருக்கு!'.. குடுகுடுப்பை கும்பலிடம் பணம், நகையை பறிகொடுத்த பட்டதாரி பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 16, 2019 11:40 PM
கணவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தோஷம் கழித்தால் சரியாகும் என்றும் கூறிய மோசடி கும்பலிடம் பட்டதாரி பெண் ஒருவர் பணம், நகைகளை இழந்துள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பயின்ற இளம் பெண் செபியா மேரி. இவர் கூலித் தொழிலாளியான தனது கணவர் பெனிராஜன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே உள்ள கொட்டகை ஒன்றில் 2 ஆண்கள், 2 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 8 பேர் கொண்ட குடுகுடுப்பை குடும்பம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கும்பல் ஊர் முழுவதும் குறிப்பலன்களை குடுகுடுப்பை அடித்து சொல்லியுள்ளனர். அப்படி செபியா மேரியின் கணவருக்கு குறி சொல்லும்போது அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதற்கு காரணம் குடும்ப தோஷம் என்றும் அதனை நிவர்த்தி செய்ய 2500 ரூபாய் பணமும், கலசம் ஒன்றில் வைத்து மஞ்சள் துணி சுற்றி பூஜை செய்ய நகைகளும் கேட்டுள்ளனர். இந்த பூஜையை செய்தால் செல்வந்தர்கள் ஆகிவிடலாம் என்றும் அவர்கள் ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.
அதன்படி பூஜையை செய்துமுடித்துவிட்டு உப்பு தண்ணீரால் கலசத்தில் தெளித்து பீரோவில் வைத்து பூட்டிக்கொண்டு நாளை காலை திறந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு, தலையில் தேய்த்துக் குளிக்க ஒரு எண்ணெய் பாட்டிலும் கொடுத்துவிட்டு அந்த கும்பல் சென்றுள்ளது. விடிந்த பின்பு அந்த கலசத்தை திறந்த பார்த்த செபியாவுக்கு அதில் கற்கள் இருந்ததை பார்த்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த கும்பலோ நகையுடன் தப்பித்து ஊரை காலி செய்துவிட்டது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.