'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் அறையில் மனைவி தூக்கில் சடலமாகக் கிடந்த நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயதுக் குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் திருக்குமரன். இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தீபக் என்ற ஒரு வயது மகன் உள்ளார். திருக்குமரன் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், மகாலட்சுமி மற்றும் மகன் தீபக் ஆகிய இருவரும் மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று காலை மாமனார் முருகேசன் வெளியில் சென்ற விட்டு மதியம் போல வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் மருமகள் மகாலட்சுமியைக் கூப்பிட்டார். ஆனால் அவரை காணாத நிலையில் வீட்டைச் சுற்றித் தேடிப் பார்த்துள்ளார். இதையடுத்து மகாலட்சுமியின் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். மருமகள் சடலமாகக் கிடந்த கோலத்தைப் பார்த்த முருகேசன் பிரமை பிடித்தது போல நின்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மருமகளின் சடலத்தைப் பார்த்து அவர் கதறினார். முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு வயது தீபக்கை காணாமல் போலீசார் தேடினார்கள். மேலும் சந்தேகத்தின் பெயரில் காவலர்கள் மாடிக்குச் சென்று பார்த்தபோது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரின் மரணம் குறித்துத் தெளிவாகத் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளார்கள். தாயும், ஒரு வயதுக் குழந்தையும் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
