'நைட் 1.30 மணி வரை டூட்டி'... 'பார்க்கிங்யில் துடிக்க துடிக்க கிடந்த இளம் மருத்துவர்'... சென்னையை அதிரவைத்துள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ மாணவர் விடுதியின் பார்க்கிங் பகுதியில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட இளம் மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். 25 வயதான இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். அதோடு கொரோனா வார்டிலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு 1.30 மணி வரை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் மருத்துவ மாணவர் விடுதியின் பார்க்கிங் பகுதியில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் கண்ணன் விழுந்து கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன மற்ற மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஏழுகிணறு போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது கண்ணன் அவரது அறையின் 3-வது மாடியிலிருந்து விழுந்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இளம் மருத்துவர் கண்ணன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இளம் மருத்துவரின் மர்ம மரணம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.