'சிறுவன் அடித்த சிக்ஸர்'... 'பந்து விழுந்த இடத்திலிருந்த தண்ணீர் டிரம்'... 'திறந்ததும் அலறிய சிறுவர்கள்'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'சாத்தான்குளம்' கடந்த ஒரு மாதமாக இந்த இடத்தை குறித்துப் பேசாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அங்குத் தந்தை, மகனுக்குக் காவல்நிலையத்தில் நடந்த கொடூரம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அந்த பகுதியில் நடந்திருக்கும் வேறொரு சம்பவம் ஈரக்கொலையை நடுங்கச் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை கிராமம். இங்குள்ள இந்திரா நகர்ப் பகுதியில் ஓடை பாலம் அருகே உள்ள இடத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுவன் அடித்த பந்து வேகமாகச் சென்று சற்று தூரத்தில் விழுந்தது. அப்போது பந்தை எடுக்கச் சிலர் ஓடிய நிலையில், அந்த பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
அங்கிருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவர்கள் சந்தேகம் அடைந்து அதைத் திறந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சுமார் 9 வயது சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தாள். இதைப் பார்த்து அலறிய சிறுவர்கள், உடனடியாக ஓடிச் சென்று ஊரில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் கொடூர கொலை அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது.
''கொலை செய்யப்பட்ட சிறுமி தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இருவரும் ஓலை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களின் வீட்டிற்கு மின்சாரம் கிடையாது. இதனால் அந்த சிறுமி டி.வி. பார்க்க, அருகில் உள்ள கல்லூரி மாணவர் முத்தீஸ்வரன் வீட்டிற்குச் செல்வது வழக்கம். இதனிடையே சம்பவத்தன்று முத்தீஸ்வரன் மற்றும் அவனது நண்பன் நித்தீஸ்வரன் ஆகிய இருவரும் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்ட சிறுமி அங்கு டிவி பார்க்க வந்திருக்கலாம், அந்த நேரத்தில் றுமி பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும், வீட்டிலிருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமியின் உடலைத் தூக்கிப் போட்டு வெளியே கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள ஓடை பாலம் அருகே டிரம்மை வைத்து விட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகிய 2 பேரைக் கைது செய்தனர். தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கும் போலீசார், அது வந்த பின்னர் தான் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது உறுதியாகத் தெரியும் எனக் கூறியுள்ளார்கள். ஏற்கனவே சாத்தான்குளம் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், 9 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
