'நீ எல்லாம் பன்றி மேய்க்கத்தான் லாயக்கு!'.. வேலையின்றி வீட்டில் இருந்த மகனை... கடுமையாக திட்டித்தீர்த்த பெற்றோர்!.. பன்றி வளர்ப்பில் சாதித்த காட்டிய இன்ஜினியர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதாச்சலத்தில் இன்ஜீனியரிங் படித்து விட்டு பன்றி வளப்பு தொழிலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் ,விருத்தாசலத்தை அடுத்த விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரின்ஸ் நவீன் இன்ஜீனியரிங் படித்துள்ளார். பிரின்ஸ் நவீனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
சும்மா இருந்த நவீனை பார்த்து பெற்றோர், 'நீ எல்லாம் பன்றி மேய்க்கத்தான் லாயக்கு' என்று திட்டியுள்ளனர். இந்த ஒற்றை வார்த்தை பிரின்சுக்கு பொறி தட்டி உசுப்பேற்றியது. பெற்றோரை வெறுப்பேற்ற இரண்டு வெள்ளை பன்றிகளை வாங்கி விளையாட்டாக வளர்த்துள்ளார்.
ஒரே வருடத்தில் இந்த பன்றிகள் 10 குட்டிகளை ஈன்றன. இதனால், உற்சாகமடைந்த பிரின்ஸ் பன்றி வளர்ப்பில் நிரந்தரமாக ஈடுபட முடிவு செய்தார். தன் நிலத்திலேயே பன்றி பண்ணை அமைத்து கடுமையாக உழைக்க தொடங்க, இப்போது பிரின்ஸிடத்தில் 300-க்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. தன் நிலத்திலேயே பன்றிகளுக்கு தேவையான பயிர்களை பயிரிட்டு உணவாக கொடுப்பதால், உணவு வாங்கும் செலவும் மிச்சமானது.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் பன்றிக்கறியை டன் கணக்கில் பிரின்ஸ் அனுப்பி வருகிறார். இது தவிர, சுய தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கும் பன்றி வளர்ப்பு தொழில் குறித்தும் கற்று கொடுக்க தொடங்கியுள்ளார்.
இது குறித்து பிரின்ஸ் நவீன் கூறுகையில், "பன்றி மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்வது எளிது. ஆனால், பன்றி வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. அர்ப்பணிப்புணர்வும், தொழில் பக்தியும் இருந்தால் மட்டுமே பன்றி வளர்ப்பில் வெற்றி பெற முடியும். நான் பட்ட கஷ்டங்களுக்கு இப்போது பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பன்றி வளர்ப்பு மிக லாபகரமான தொழில் என்பதற்கு என்னை தேடி பல மாநிலங்களில் இருந்து வந்து பன்றிக்கறியை வாங்கி செல்வதே சாட்சி" என்கிறார்.