'உலகத்துல இருக்குற எல்லா வண்டியையும் ஓட்டிப்பாக்கணும்!'.. விநோத ஆசையால தடம் புரண்ட இளைஞரின் வாழ்க்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓட்டிப்பார்க்கும் ஆசையில் வாகனங்களை திருடும் நூதன திருடன் திருத்துறைப்பூண்டியில் சிக்கினார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவருக்கு 4 லாரிகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடம் அருகில் நிறுத்தி இருந்த இவரது லாரி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து, முருகானந்தம் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு நபர் லாரியை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், லாரியை திருடி செல்பவரின் முகம் சரியாக தெரியாததால் அவரை போலீசார் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முந்திரி காட்டில் ஒரு லாரி நிற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார் பண்ருட்டிக்கு சென்று லாரியை கைப்பற்றி திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வந்தனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாங்கல் ஊராட்சியை சேர்ந்த மணிவேல் (25) என்பதும், இவர்தான் முருகானந்தத்தின் லாரியை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்தனர்.
மணிவேல் வாகனங்களை திருடி விற்பதற்காகவோ, அதை வேறு எதுவும் செய்வதற்காகவோ வாகனங்களை திருடுவது இல்லை. பல்வேறு வாகனங்களை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வாகனங்களை திருடி ஓட்டி செல்வதும், அதில் டீசல், பெட்ரோல் முடிந்ததும் அந்த வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு வேறு வண்டியை திருடி செல்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதேபோல் முருகானந்தத்தின் லாரியை திருடிய மணிவேல் அதை திருத்துறைப்பூண்டியில் இருந்து பண்ருட்டி வரை ஓட்டிச்சென்றுள்ளார். அதற்குமேல் டீசல் இல்லாததால் பண்ருட்டிலேயே லாரியை நிறுத்தி விட்டார். அதன் பின்னர், அங்கிருந்து ஒரு லாரியை திருடிக்கொண்டு நாகப்பட்டினம் வந்துள்ளார். அங்கு லாரியை நிறுத்தி விட்டு, ஒரு சரக்கு ஆட்டோவை திருடிக்கொண்டு திருவாரூர் சென்றுள்ளார். அங்கே சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.