சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞரை ‘கிண்டல்’ செய்த நபர்.. நொடியில் நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞரை கொரோனாவை வைத்து கிண்டல் செய்த நபரை பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பெருவிளைக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் சுபாஷுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சில நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சுபாஷ், பின்னர் அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜின் ராய் என்பவர் சுபாஷைப் பார்த்து அடிக்கடி ‘கொரோனாகாரன்’ என கிண்டல் செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சுபாஷ் தனது சகோதரர் செல்வத்திடம் இதைப்பற்றி சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அஜின் ராயை செல்வம் கண்டித்துள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து சுபாஷை அவர் கொரோனாக்காரன் என சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் உடைந்த பாட்டிலால் அஜின் ராயை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஜின் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த மருத்துவர் நடராஜன், சென்னை போன்ற பெரிய நகரத்தில் கொரோனா பரவுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. கொரோனா என்பது அச்சத்துக்குரியதோ, கேலி பேச்சுக்குரியதோ அல்ல. மனிதர்களிடத்தில் மற்றொருவருக்கு பரவும் தொற்று என்பதாலேயே மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சை அளிக்கின்றனர். மற்றபடி, இந்த நோய் மட்டுமல்ல எந்த நோயுமே கேலிக்குரியது அல்ல. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய த்ருணம் இது. கேலி பேசுபவர்களுக்கும் இந்த நோய் வரும். அதனால் அடுத்தவர் மனம் புண்படும்படி கேலி பேசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
