'இந்த நிலமைலகூட இதெல்லாம் தேவையா?'... 'இவர்களுக்கு மட்டும் பாதிப்பு 3 மடங்கு உயர்வு!'... 'உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு சூழலில் இளைஞர்களுக்கு கொண்டாட்டங்கள் தேவையா என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்முதலாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்துள்ளது. கொரோனா அச்சத்தால் பல மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகே படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் இருந்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரம் குறித்து கவலை கொள்ளாமல் சில நாடுகளில் கடற்கரை, கிளப் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள் அதிகமாக கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக இளைஞர்களிடையே பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நிலைமையில்கூட இளைஞர்களுக்கு கொண்டாட்டங்கள் தேவையா என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இளைஞர்கள் தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், நோய் பரவலை தடுக்க இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்படும் சுவாச பிரச்சனைகள் வயதானவர்களை விட இளைஞர்களுக்கு குறைவாகவே உள்ளபோதும், 15- 24 வயதிக்குட்பட்டவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதால் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.