VIDEO : 'கொரோனா வார்டுல பன்றிகள்...' 'கூட்டமா அது பாட்டுக்கு ஜாலியா சுத்திட்டு திரியுது...' 'ஷாக் ஆன கொரோனா நோயாளிகள்...' - ட்ரெண்டிங் ஆகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் கொரோனா சிகிச்சை மையமாக விளங்கும் மருத்துவமனையில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது அரசியல் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி தற்போது மிக தீவிர நிலையை அடைந்து வருகிறது எனலாம். இந்நிலையில் கர்நாடகாவின் அரசு மருத்துவமனை ஒன்றில் பன்றிகள் அலையும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடக 16வது இடத்தில் உள்ளது. இதுவரை கொரோனா வைரசால் சுமார் 63,772 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 39,376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 23,065 பேர் வீடு திரும்பியுள்ளனர், 1,331 உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி ஆளும் மற்றும் எதிர்க்கட்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா சிகிச்சை மையமாக விளங்கும் கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் கொரோனா வார்டில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில் தாய் பன்றிகள் தங்கள் குட்டிகளுடன் மருத்துவமனையில் சுற்றி திரியும் காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளிவந்த பிறகு ஆளும் கர்நாடக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சனம் செய்தும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் குடும்பத்தினரும் தங்களின் அதிர்ப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு, 'இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்' எனக்கூறியுள்ளார்.அதைத்தொடர்ந்து கல்புர்கி மாவட்ட ஆட்சியர் ஷரத் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, பன்றிகளின் உரிமையாளர் மீது கல்புர்கி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
