தேங்கி நிற்கும் மழை நீரில் கால் நனைக்கத் தயங்கி நாற்காலி மீது ஏறி தொல்.திருமாவளவன் வருவது போல் ஒரு வீடியோ வெளியாக அது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு தற்போது விசிக கட்சியினர் அந்த வைரல் வீடியோ காட்சியின் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
ஒரு இடத்தில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. டிப்-டாப் ஆக உடை அணிந்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது கால்கள் தண்ணீரில் நனையாமல் அந்த இடத்தைக் கடக்க முயற்சிக்கிறார். அப்போது அங்கு இருந்த இணைந்த இரும்பு நாற்காலிகள் மீது திருமா ஏறிக்கொள்கிறார். பின்னர் தொண்டர்கள் அந்த நாற்காலியை இழுத்துச் செல்கின்றனர்.
பின்னர் அந்த நாற்காலி மேலேயே நடந்து அந்த இடத்தைவிட்டுக் கடந்து நேராக காருக்குள் ஏறிக்கொள்கிறார் திருமாவளவன். இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. 'மழை நீரில் இறங்கினால் என்ன ஆகப் போகிறது?’ எனப் பல எதிர்மறை விமர்சனங்கள் சமுக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில் திருமா ஏன் அப்படி மழைநீரில் கால் படாமல் சென்றார் என்ற கேள்விக்கு விசிக-வினர் விளக்கம் கொடுத்துள்ளனர். திருமாவளவன் நாடாளுமன்றம் கூட்டத்தொடருக்காக டெல்லி கிளம்பி இருக்கிறார். அதற்காகவே டிப்-டாப் ஆக உடை அணிந்து கொண்டு விமான நிலையம் செல்வதற்குக்காத் தயாராகி வெளியே வந்து இருக்கிறார்.
ஆனால், மழை நீர் தேங்கி நின்று இருந்துள்ளது. மேலும், திருமாவின் கால்களில் அடிபட்டி காயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மழை நீரில் நனைந்தால் அடுத்து 3 மணி நேர விமானப் பயணத்தின் போது ஈரத்துடனேயே இருக்க வேண்டும் என்பதால் திருமா தண்ணீரில் இறங்க யோசித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தொண்டர்கள் அவரை தோளில் சுமந்து செல்ல தயாராக இருப்பதாக முன் வந்துள்ளனர்.
தொண்டர்கள் தோளில் ஏற திருமா மறுப்புத் தெரிவித்துள்ளார். அதனால், தொண்டர்கள் சிலர் சேர்ந்து யோசனை செய்து திருமாவை அருகில் இருந்த நாற்காலியில் ஏற்றி அதை கார் வரையில் இழுத்துக் கொண்டே சென்றுள்ளனர். அதன் பின்னர் நாற்காலியில் இருந்து காருக்குத் தாவிக் கொண்டார் திருமா. இதையடுத்து விசிக-வினர், ‘திருமா பல ஆண்டுகளாக வேளச்சேரியில் தான் தங்கி உள்ளார். அவர் நினைத்திருந்தால் இந்த மழைக்கு நிச்சயமாக ஒரு ஹோட்டலுக்குச் சென்று தங்கி இருக்கலாம்.
ஆனால், அவர் சமத்துவம் பார்ப்பவர் என்பதால் தான் இங்கேயே இருக்கிறார். காலில் அடிபட்டு இருந்த காரணத்தினாலேயே திருமா அதுபோல் நாற்காலிகள் மீது ஏறி கடந்து சென்றார்’ என விளக்கம் கொடுத்துள்ளனர்.