'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 16, 2019 12:57 PM

இயக்குநர் அமீர், இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தனது ஆதரவு நிலைப்பாடு உட்பட தனது அரசியல் கருத்துக்களையும் பற்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியினை இங்கு படிக்கலாம்.

\'I Support Seeman, Kamal, Thirumalavalavan.. Not BJP\', Ameer Interview

ரஜினி தொடங்கி பலரும் சிஸ்டத்தை மாற்றுவதாக பேசுகிறார்கள். இந்த தேர்தலில் யார் உண்மையில் சிஸ்டத்தை மாற்றப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அடிப்படையாக இந்த நாட்டின் சிஸ்டத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மாற்றிவிட முடியாது. சுதந்திர இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்த ஒன்றியம்தான் இந்தியா. வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டு அவர்கள் விட்டுவிட்டுச் சென்ற பலவற்றை நாம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறோம். அந்த சிஸ்டத்தில் இருந்தே நாம் இன்னும் மீள முடியவில்லை. பிறகு எப்படி நாம் உடனடியாக இங்கிருந்து ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் மாற்றுவது என்பது சரியானதாக இருக்க முடியும்? இதை இரவில் செய்துவிட முடியாது ஏனென்றால் நாம் இந்த சிஸ்டத்திற்கு பழகியிருக்கிறோம். உதாரணமாக இந்த சிஸ்டத்திற்கு மாற்று அரசியலை முன்வைக்கக்கூடிய நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய இருவரின் கையிலும் மாநிலத்தின் ஒற்றை ஆட்சி அதிகாரம் வந்தாலும் கூட சிஸ்டத்தை எப்படி சரி செய்வீர்கள்? இப்படி ஒரு சிஸ்டத்திற்குள் இருந்துகொண்டு சிஸ்டத்தை மாற்றுவேன் என்று சொல்லுவது கேட்பதற்குத்தான் நன்றாக இருக்குமே தவிர அறிவுக்கு பொருந்தாது. நம் கண்ணுக்கு முன்னால் இருக்கும் எதையும் மாற்ற முடியாது. இந்த இடத்திற்கு நாம் செல்வதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். நாம் தொடர்ந்து மக்களின் ஆட்சி அதிகாரத்திற்கான ஆட்களைத்தான் மாற்றுகிறோம். ஆனால் அவர்களை, நாம் தயார் செய்வதில்லை. அப்படி மக்களுக்கான பிரதிநிதிகளை தயார் செய்யும் பொழுது, அவர்கள் மீது தேச விரோதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசு சுமத்தும். அரசு யாரையெல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்கிறதோ, அவர்களெல்லாம் மக்களுக்கு ஆதரவாளர்கள். அரசுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர், மக்களுக்கான ஆளாக இருக்க முடியாது. அரசு யாரையெல்லாம் குறி வைத்து தாக்குகிறதோ, அரசு யாரை எல்லாம் வன்மமாக நினைக்கிறதோ, வழக்குகளை போடுகிறதோ, சிறையில் அடைகிறதோ, தவறான பட்டப் பெயர்களை அவர்களுக்கு சூட்டுகிறதோ அவர்கள்தான் மக்களுக்கான ஆட்கள்.

இந்த கட்சி மற்றும் சித்தாந்தம் சரி; இந்த கட்சி மற்றும் சித்தாந்தம் தவறு என்று இருவேறு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றால் இயக்குநர்கள் தரப்பில் உள்ள பலரும் குறிப்பிட்ட கட்சி அல்லது சித்தாந்தத்தை தவறு என்று கூறுகிறார்களே தவிர, அதற்கு மாற்று என்ன என்பதுபற்றி கூறுவதில்லையே?

ஏன்? கரு.பழனியப்பன், சமுத்திரகனி, ராஜூமுருகன், ரோகிணி என பலரும் தத்தமது ஆதரவு நிலைப்பாட்டை எது சரி என்கிற அளவில் பதிவு செய்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.? அவர்களுக்கு சரி என்று படும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்களே. ஆனால் மோடி இவர்கள் மோடியை எதிர்ப்பதாக நினைத்து நாட்டை எதிர்க்கிறார்கள் என்று விமர்சிக்கிறார். இப்படியான ஒரு வாத்தியத்தை பொதுவெளியில் கூறுகிறார். அவர் ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர்தானே? நாட்டுக்கு மோடிக்கும் என்ன தொடர்பு நாட்டின் அடையாளமாக மோடி எப்படி மாறமுடியும். ஆக நாங்கள் ஒரு நாளும் நாட்டை அதாவது இந்தியா என்ற கட்டமைப்பை எதிர்க்கவில்லை. இந்தியா என்ற கட்டமைப்பை சீர்குலைக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அவ்வாறு நினைக்க வைத்து விடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் எவ்வளவு விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் மீண்டும் இந்த பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற விவாதங்கள் நிகழ்வது சாத்தியம் இல்லாமல் போய்விடும். வடநாட்டை சேர்ந்த ஒரு எம்எல்ஏ 2021 டிசம்பருக்குள் இந்த நாடு இந்து நாடாக அறிவிக்கப்படும் என்று பொதுவெளியில் சொல்லுகிறார். இதை கண்டித்தது யார்? இங்குதான் முரண்பாடு உள்ளது. மரியாதைக்குரிய பிரதமர் தன்னை ஒரு சௌகிதார் செல்கிறார் என்று கூறுகிறார்; ஆனால் மரியாதைக்குரிய சுப்பிரமணிய சுவாமி தான் ஏன் சௌகிதாராக இருக்க வேண்டும், தான் ஒரு கட்டளையிடும் இடத்தில் இருக்கவிருப்பதாகவும் கூறுகிறார். நாங்கள் இதைத்தான் எதிர்க்கிறோம். நாங்கள் ஒரு நாளும் பாஜக என்னும் கட்சியையோ மோடி என்ற தனி மனிதரையோ எதிர்க்கவில்லை. அந்த சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறோம். சித்தாந்தத்தை எதிர்த்தால் எங்களை இந்துக்களின் எதிரிகள் என்று சொல்லிவிடுவார்கள். அப்போது என்றால் ஸ்டாலின் கிறிஸ்தவரா? திருமாவளவன் கிறிஸ்தவரா? மம்தா பானர்ஜி யார்?, சந்திரபாபு நாயுடு யார்? ,  பவன் கல்யாண் யார்? யார் இவர்கள் எல்லாம்.
நாங்கள் ஏன் சீமானை ஏன் ஆதரிக்கிறோம்? கமல்ஹாசனின் ஆதரிக்கிறோம்? வீரமணியின் ஆதரிக்கிறோம்? பாஜகவின் சித்தாந்தம் அபாயகரமாக இருப்பதாகவே நாங்கள் கூறுகிறோம்.


திரை இயக்குநர்களைப் பொருத்தவரை ஒரு சாரர் நேரடியாக பாஜக எதிர்ப்பை கூட்டாக சேர்ந்து முன்வைக்கவும், ஒரு சாரார் பாஜக எதிர்ப்பதற்கு திமுகவுடன் கைகோர்க்கவும் செய்கின்றனர்‌. பாஜக போன்ற ஒரு தனி ஒரு கட்சியை டார்கெட் செய்வது சரிதானா? இது நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் உங்களது நிலைப்பாடு என்ன?

பாஜகவை டார்கெட் செய்துதான் ஆக வேண்டும். திரைக்கலைஞர்கள் மட்டுமல்லாமல் பாஜகவின் ஆட்சியை அகற்றும் பொறுப்பு என்பது எல்லாவருக்கும் இருக்கிறது. பாஜகவை எதிர்ப்பது அமீர் அல்ல. கடந்த 2014ம் வருடத்தில் பாஜக, ‘50 ஆண்டுகளாக இந்த நாடு வளர்ச்சி அடையாமல், ஊழலில் திளைத்திருப்பதால் ஒரு மாற்றம் வேண்டும்’ என்று சொல்லி எழுச்சி பெறத் தொடங்கியபோதே, அது உண்மையில்லை என்று எங்களைப் போன்றவர்களுக்கு தெரியும். ஆனாலும் பொது வெளியில் இருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் பாஜக சொன்னது உண்மை என்று நம்பினார்கள். எனக்கும் என் உதவி இயக்குநர்களுக்கும் கூட விவாதங்கள் நடந்தன. அவர்களெல்லாம் மோடியை நம்பினார்கள். அப்போதும்கூட நாங்கள், ‘அது மோடி அல்ல. அது ஒரு முகமூடி. அந்த அரசியல் உங்களுக்கு புரியாது’ என்று அவர்களிடம் கூறினோம். இப்போது எதுவும் மாறவில்லை என்கிற நிலையில் அவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்.

சீமானுக்கு தமிழ் தேசிய பொருளாதாரத்தை பற்றியும் இன்னும் பலவற்றை பற்றியுமான துல்லியமான பார்வை இருக்கிறது. கமல்ஹாசன் பொறுத்தவரை இங்கு இருக்கும் சிஸ்டத்தை சரி செய்வது பற்றிய பார்வையை முன்வைக்கிறார். ஆக, சீமான், கமல்ஹாசன் ஆகிய இருவரின் கருத்தாக்கங்களும் வெவ்வேறாக இருக்க, இருவரையும் எப்படி நீங்கள் ஒருசேர ஆதரிக்கிறீர்?

அப்படி இல்லை. இருவரின் நோக்கமும் மக்கள் நலனாகவே இருக்கிறது. அம்பானியின் இரண்டு மகன்களும் ஒரே மாதிரி தொழில் செய்யவில்லை. இருவரும் வெவ்வேறு வேலைகளை செய்கிறார்கள். எப்படி ஒரே மாதிரி எல்லாரும் சிந்திக்க முடியும்.? நான் பார்த்த அரசியலில் இருந்து வேறு ஒரு பார்வை பார்ப்பதற்கு எனக்கு துணைநின்றவர் சீமான். பொதுவாகவே எல்லா அரசியல்வாதிகளும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பேசுவார்கள். ஆனால் அது ஏன் நம் நாட்டில் புரையோடி கொண்டு இருக்கிறது என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிகாரத்தை பயன்படுத்தி காரியங்களை சாதிக்கிறார்கள். ஆனால் பொதுவெளியில் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆக இந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வெறும் லஞ்சம் ஊழல் மட்டும் மக்களுக்கானது மட்டும் கிடையாது; அது மண்ணுக்குமானது அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்கிற கருத்தை பொதுவெளியில் அரசியல் மேடையில் ஒரு அரசியலாளராக பேசியவர் சீமான். ஆகம் சீமானுக்கும் கமலுக்கும் இப்போது பெரிய வித்தியாசம் இல்லை. கட்சி தொடங்கும் போது கமல்ஹாசன் தேசியம் பேசினார். இப்போது வைரலாக போய்க் கொண்டிருக்கும் அவரது பிரச்சார வீடியோ ஒன்றில் தமிழ்தேசிய அரசியலை பேசியிருக்கிறார். அனிதாவுக்காக பேசுகிறார், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் பற்றி பேசுகிறார். மீத்தேன் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருக்கிறார். இதற்கெல்லாம் தீர்வாக தமிழ் தேசியம்தான் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமீரும்(தன்னைச் சொல்கிறார்) தமிழ் தேசியம்தான் பேச வேண்டும் என்று அவசியமுமில்லை. எந்த பொதுவான ஒன்றில் நாம் இணைய வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

பாஜக மீது கடுமையான விமர்சனங்களைச் செய்யும் நீங்கள், ஆனால் தேர்தல் பிரசாரங்களுக்கு எந்த கட்சியுடனும் இணங்கியதாக தெரியவில்லையே?

இங்கே சில வரலாற்றுப் பிழைகள் கூட்டணி அமைப்பதில் தொடங்கி, தேர்தல் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது வரை, சின்னச் சின்ன தவறுகளாக நிறையவே நடந்திருப்பதை உணர முடிகிறது. அவற்றையெல்லாம் சரி செய்யாமல் அங்கு சென்று முன்நிற்க முடியாது. இதனாலேயே பொதுவெளியில் நின்று என் கருத்தைச் சொல்கிறேன். பிரச்சாரத்திற்கு போகாமல் இருப்பதற்கான காரணம் என்பது இதுதான். எனினும் அவ்வாறு சென்றிருந்தால் திருமாவளவன் அவர்களுக்காகத்தான்  சென்றிருப்பேன். காரணம் 2000 வருடங்களாக போராடும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு கட்சிக்கான சின்னத்தை பெற்று அந்த சின்னத்தில் நின்று, இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தன் சின்னத்தை கருத்தை கிராம மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார். தனித்து விடப்பட்டது போன்றதொரு நிலையில் அவர் இருக்கிறார். தமிழகத்திற்கு கிடைத்த சரியான சமூகநீதி பேசக்கூடிய ஒரு தலைவர் அண்ணன் திருமாவளவன் என்று நான் பார்க்கிறேன். அவருக்கு தேர்தலில் ஏதேனும் பின்னடைவு வந்தால் அது அவரது தோல்வி அல்ல‌. அதற்கு தமிழகத்தில் சமூக நீதி குலைந்துவிட்டதாக அர்த்தம். ஒட்டுமொத்த மக்களுடைய தோல்வியாகத்தான் அதை நான் பார்க்கிறேன். இம்முறை அது நிகழ்ந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம்.