'கல் எறிந்து... செருப்புகளை வீசி... கடும் தாக்குதல்!'... திருமாவளவனை முற்றுகையிட முயன்று... பாஜக - விசிக இடையே கைகலப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கவுந்தப்பாடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்டியதால் இரு கட்யினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்துள்ளார்.
சமீபத்தில் மனுதர்ம நூலில் உள்ள கருத்துக்களை குறிப்பிட்டு பெண்கள் பற்றி திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி கந்தசாமியூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவரை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்ப முயன்றனர்.
அதனை தொடர்ந்து திருமண நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் முழக்கம் எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாரதிய ஜனதாவினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது இருகட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வேன் மீது கல் மற்றும் செருப்புகளை வீசி தாக்கினர்.
இதில் வேன் கண்ணாடி உடைந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பையும் கலைத்த போலீசார், இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.