'இந்த மிரட்டலுக்குலாம் பயப்பட மாட்டேன்'.. 'ஒத்தையில நிப்பேன்.. வாங்கலே'.. தேதி, இடம் கொடுத்த காயத்ரி ரகுராம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 19, 2019 06:01 PM
சமீபத்திய மேடைப் பேச்சு ஒன்றில், இந்து மதக் கோயில்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தினை திருமாவளவன் பேசியிருந்தார். தேவாலயங்களையும், கோயில்களையும் பற்றி பேசிய திருமாவளவன், ‘ஆபாசமான சிலைகள் இருந்தால் அது கோயில்’ என்று பேசியிருந்தார்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்தினை, இந்து மக்கள் அல்லாது, பொதுவான கடவுள் நம்பிக்கை உள்ள பலராலும், ஏன்? கடவுள் நம்பிக்கை இல்லை எனினும் பிறரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்கும் பார்வை உள்ள பலரும் விமர்சித்திருந்தனர். அந்தவகையில் நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராமும் திருமாவளவனை விமர்சித்து தனது ட்விட்டரில் ஒரு பதிவினை போட்டிருந்தார்.
ஆனால் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அப்பதிவினை பின்னர் காயத்ரி ரகுராம் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது. திருமாவளவன் மீதான காயத்ரி ரகுராமின் விமர்சனக் கருத்தினால் அதிருப்தி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள், காயத்ரியின் வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அவர் பயந்து வெளிவராமல் வீட்டினுள்ளேயே இருப்பதாகவும் பேசி வந்தனர்.
ஆனால் இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், திருமாவளவன் இந்து மதத்தை தொடர்ந்து இழிவான வகையில் விமர்சிப்பதாகவும் அவரது கட்சியினர் தன்னை அச்சுறுத்தி தொந்தரவு செய்வதாகவும், எனினும் இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை என்றும், தனது மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்கக் கூட தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் 27ஆம் தேதி, தான் மெரினா கடற்கரைக்கு தனியாக போகவிருப்பதாகவும், வேண்டுமென்றால் அங்கு வந்து இந்து மதம் பற்றி தவறாக பேசுபவர்களுடன் விவாதிக்கத் தயார் என்றும் துடுக்காக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் திருமாவளவனிடம் இதுபற்றி தானே நேரில் பேசிக்கொள்ளக்கூட தயார், வேறென்ன உங்களுக்கு பிரச்சனை? என்றும் இந்துத்துவத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள், நான் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? என்றும் அவர் கூறியுள்ளார்.