‘அப்படி என்னதான் தோனி மேல கோபம்’.. கம்பீர் வெளியிட்ட லிஸ்ட்.. சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகௌதம் கம்பீர் வெளியீட்ட சிஎஸ்கே அணி தக்க வைக்கவுள்ள வீரர்களின் பட்டியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அடுத்த ஆண்டு அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இடம் பெறவுள்ளது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய வீரர்களில் 4 பேரை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதில் 2 இந்திய வீரர்கள் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் என்ற அடிப்படையில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை முதல் வீரராக தக்க வைத்துள்ளதாக அறிவித்தது. மீதமுள்ள 3 வீரர்கள் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து அணியும் தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை இன்று (30.11.2021) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிஎஸ்கே தக்கவைக்க உள்ளவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, டு பிளசிஸ், சாம் கர்ரன் ஆகிய 4 வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. சிஎஸ்கே அணி தோனியை முதல் வீரராக தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது பெயரை குறிப்பிடாமல் விட்டது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.