'டேய் யாருடா நீங்க, என் கடைல என்ன பண்றீங்க'... 'கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் நடந்த பலே சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருடப் போன இடத்தில் சில நேரம் சுவாரசியமான சம்பவங்கள் நடந்து அந்த திருடர்கள் மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், பாரதி நகரில் சென்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தமிம் அன்சாரி. இவர் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து நள்ளிரவில் இவரது கடையின் பூட்டை உடைத்த 2 திருடர்கள் கடையினுள் புகுந்து போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைத் திருட முயன்றுள்ளனர். அப்போது மாத்திரைகளைத் திருடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் கடையின் ஷட்டர் தானாக மூடிக் கொண்டது. திருடும் ஆர்வத்திலிருந்த அவர்கள் இதைக் கவனிக்கவில்லை.
இந்நிலையில் ஷட்டரை திறந்து கொண்டு வெளியே செல்லலாம் என முயற்சித்தபோது அவர்களால் முடியாமல் போனது. எவ்வளவு முயன்றும் ஷட்டரை திருடர்களால் திறக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். பின்னர் எப்படியாவது ஷட்டரை திறந்து விடலாம் என முயன்று கொண்டிருந்த நிலையில், அதிலிருந்து சத்தம் வந்துள்ளது. நள்ளிரவில் வந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த கடை இருக்கும் இடத்தின் உரிமையாளர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த பகுதியிலிருந்த பொதுமக்களின் உதவியோடு கடையின் வெளியே பூட்டை போட்டு விட்டு, மருந்தக உரிமையாளருக்கும், பல்லாவரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ஷட்டரை திறந்தார்கள். அப்போது கோழிக் குஞ்சு சிக்கியது போல இரு திருடர்களும் வசமாகச் சிக்கிக் கொண்டார்கள். இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அதில், திரிசூலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்ராஜா(20), மற்றும் கார்த்திக்(19), என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மருந்தகத்தில் அதிகப் பணம் கொடுத்து அவ்வப்போது போதைக்காக மருத்துவரின் பரிந்துரை ரசீது இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதாகவும், தற்போது பணம் இல்லாததால் மாத்திரைகளையும், பணத்தையும் திருட வந்த போது ஷட்டர் மூடிக் கொண்டதால் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். திருட வந்த இடத்தில் ஷட்டர் முடிய நிலையில் திருடர்கள் இருவரும் வசமாகச் சிக்கிக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.