'ஆசையாக சென்ற நண்பர்களுக்கு நடந்த பரிதாபம்'... 'அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்'... தொடர் கதையாகும் சம்பவங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 15, 2020 05:17 PM

சேலம் அருகே, ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Salem Districts two school children who drown in lake

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் சஞ்சய் (11). அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் நவீன் (16). இவர்களில் சஞ்சய், ஆறாம் வகுப்பும், நவீன் எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று காலையில் பெரியாம்பட்டியில் உள்ள ஏரியில் மேலும் மூன்று நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அங்கே மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த சிறுவர்கள், ஏரியில்  குளிக்கலாம் என்று எணணி இறங்கி குளித்தனர்.

அவர்களில் சஞ்சய், நவீன் ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாத என்று கூறப்படுகிறது. ஆர்வ மிகுதியில் ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்து மீண்டும் கரைப்பகுதிக்குத் திரும்ப முடியாமல் நீரில் தத்தளித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள், அந்தப்பகுதியில் சென்றவர்களுக்குத் தகவல் கொடுத்து ஏரிக்கு அழைத்து வந்தனர். ஆனால், அதற்குள் சிறுவர்கள் இருவரும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டனர்.

இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் சிறுவர்களின் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கு நேரத்தில் இதுபோன்று சிறுவர், சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி உள்ளது.