ஊரடங்கு முடிந்த பிறகு... 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தலாம்!... மத்திய அரசு அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 08, 2020 05:21 PM

நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும், சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எனவும் மத்திய அரசுக்கு தேசிய குழு பரிந்துரைத்துள்ளது.

ncert suggests centre to engage 50 percent students post lockdown

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பது, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது, வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அந்த குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும், ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எனவும் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பள்ளிக்கு வராத மீதம் இருக்கும் 50 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும், தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் பரிந்துரை மீது வருகிற 11ம் தேதி புதிய முடிவுகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த வாரத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.