'நான் திருநங்கைன்னு தெரிஞ்சதும் பட்ட அவமானங்கள்'... 'அம்மா சொன்ன தைரியம்'... காவல்துறையில் சாதித்த ரிஹானா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல சோதனைகளைச் சாதனைகளாக மாற்றியுள்ளார் திருநங்கை ஒருவர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் என மொத்தம் 10,906 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற 2,204 ஆண்கள், 1,005 பெண்கள், 1 திருநங்கை என 3,210 பேருக்கான தகுதித்தேர்வில் ஆண்களுக்கான தகுதித்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 1,334பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பெண்களுக்கான உடல் தகுதித் தேர்வுகள் இன்று தொடங்கியது. இதில் திருச்சி தென்னூர் சின்னசாமி நகரைச் சேர்ந்த ரிஹானா என்ற 19 வயதே ஆன திருநங்கை கலந்து கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்துத் தேர்வாகியுள்ளார்.
ரிஹானா தான் ஒரு திருநங்கை எனத் தெரிந்தவுடன் பல்வேறு அவமானங்களைச் சந்தித்துள்ளார். ஆனால் அவரது தாய் ரிஹானாவுக்கு பக்க பலமாக இருந்து தோள் கொடுத்துள்ளார். இதனால் அவர் பட்ட பல அவமானங்கள் மற்றும் துன்பங்களைத் தூக்கி எறிந்து இன்று காவலராகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
12ஆம் வகுப்பு முடித்த இவர் காவலர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வந்ததும் விண்ணப்பித்து, பல முயற்சிகள் எடுத்து தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 95% தேர்வு முழுமையடைந்த நிலையில் வருகின்ற 10-ம் தேதி நடைபெற உள்ள ஷாட் புட் மற்றும் நீளம் தாண்டுதலில் தடம் பதிக்க உள்ளார். தன் மகன் திருநங்கை எனத் தெரிந்தவுடன் பல்வேறு இன்னல்களுக்கும், சமுதாயத்தின் அவமானங்களுக்கும் ஆளான தங்களுக்கு தற்போது தன் மகள் காவலராக உள்ளார் என்பது பெருமை அளிப்பதாக உணர்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார் ரிஹானாவின் தாய்.

மற்ற செய்திகள்
