'நான் இனிமேல் பிரசாரம் பண்ணலங்க...' 'இவ்ளோ நாள் எனக்கு புரியல...' என்னெல்லாம் பண்றாங்க தெரியுமா...? - மனமுடைந்த திருநங்கை வேட்பாளர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை சேர்ந்த 28 வயதான அனன்யா குமாரி என்னும் திருநங்கை, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற பெருமிதத்துடன் நினைவு கூறப்பட்டார்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பெருமன் நகரைச் சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். இவர் கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி என்ற பெருமை கொண்டவர். அதோடு மட்டுமில்லாமல் அனன்யா, ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞர் மற்றும் ஒரு தனியார் சேனலில் பணிபுரியும் செய்தி தொகுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கேரள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனநாயக முன்னணியை (யுடிஎஃப்) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பி.கே குன்ஹாலிக்குட்டிக்கு எதிராகவும், இடது ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பிஜிஜிக்கு எதிராக களமிறங்கினார் அனன்யா.
இந்நிலையில் தற்போது தான் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி கடந்துவிட்ட போதிலும், தான் இனி தேர்தல் பிரசாரத்தை இனி தொடரப்போவதில்லை என்று அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கு காரணம் தான் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தன்னை வேட்பாளராக பரிந்துரைத்த ஜனநாயக சமூக நீதிக் கட்சியின் (டி.எஸ்.ஜே.பி) தலைவர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அனன்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அனன்யா, 'நான் ஒரு திருநங்கை என்பதாலேயே என்னை முன் நிறுத்துவதற்கு அவர்களுக்கு சில திட்டங்களும் காரணங்களும் இருந்துள்ளன போல. ஆனால், எனக்கு அது தெரியவில்லை, புரியவும் இல்லை. எனக்கென்று தனியாக ஓர் ஆளுமைத்திறன் மற்றும் எனக்கான தனிப்பட்ட சொந்த கருத்துகள் உள்ளன.
ஆனால், டி..எஸ்.ஜே.பி தலைவர்கள் யு.டி.எஃப் வேட்பாளர் பி.கே. குன்ஹாலிக்குட்டியைப் பற்றி மோசமாக பேசவும், எல்.டி.எஃப் அரசாங்கத்தை விமர்சிக்கவும் என்னை கட்டாயப்படுத்தினர்.
அதுமட்டுமில்லாமல், பிரசாரத்தின்போது முகத்தை திரையிட்டு மறைத்து கொள்ளும்படி, கட்சித் தலைவர்களால் நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். அவர்கள் என்னை ஒரு பாலியல் தொழிலாளிபோல சித்தரித்து அவமதித்தனர்.
நான் தேர்தல் களத்திற்கு இறங்கியதற்கு காரணம்,கேரளாவில் திருநங்கைகளுக்கு பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்காகதான். ஆனால் வெங்கரா தொகுதியில் இருந்து போட்டியிட எனக்கு அறிவுறுத்தியது கட்சிதான். இது எனது முடிவு அல்ல' என வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் டி.எஸ்.ஜே.பி தலைவர்களை தான் எதிர்ப்பதால் தன்னை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக அனன்யா குமாரி அலெக்ஸ் கூறினார்.