ஒலிம்பிக் ஹாக்கியில்... இந்திய மகளிர் அணியின் வரலாற்று சாதனை!.. 'சக் தே இந்தியா'!.. யார் இந்த ரியல் லைஃப் ஷாரூக் கான்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய மகளிர் அணி படைத்திருக்கும் வரலாற்று சாதனை குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிச் சுற்றுக்கு முதன் முதலாகத் தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து, சக் தே இந்தியா படத்துடன் இந்த வெற்றியை ஒப்பிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் ஹாலந்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர், சோயர்ட் மாரின்.
ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி ஷாரூக் கான் நடிப்பில், 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'சக் தே இந்தியா'. அப்படத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நடித்த ஷாரூக் கான், அந்த அணி உலகக்கோப்பையை வெல்ல வழிநடத்திச் செல்வார். அந்தப் படத்திலும் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி வீழ்த்தி கோப்பையை வெல்லும். இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இன்றைய கோச் சோயர்ட் மாரின் அந்த படத்தை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
"என் இருதயமா? இன்னும் வேலை செய்து கொண்டிருப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொரு ஆட்டமாக எடுத்துச் செல்வோம் என்றே திட்டமிட்டோம். அதாவது அடுத்த போட்டியில் என்ன முன்னேற்றம் காட்டப் போகிறோம் என்றே ஒவ்வொரு போட்டியிலும் திட்டமிட்டோம்.
தடுப்பாட்டம் குறிப்பாக கோலுக்கு அருகே சர்க்கிளில் நன்றாக இல்லை. அதனால் இந்த முறை அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். மேலும், இதில் கவனம் செலுத்தியதால் வெற்றி தோல்வி என்பதில் கவனம் செல்லவில்லை.
எல்லாம் மனநிலையைப் பொறுத்ததே. நான் வீராங்கனைகளிடம் கூறியதெல்லாம் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே, சுதந்திரமாக ஆடுங்கள் என்றேன். அதைத்தான் இன்று செய்தோம்.
கனவு நனவான தருணம். இது உண்மையில் நிகழ்ந்த சக் தே இந்தியா தான்" என்றார்.
இதற்கிடையே, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சோயர்ட் மாரின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டதாவது, "குடும்பத்தார் மன்னிக்க வேண்டும். நான் தாமதாக வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sorry family , I coming again later 😊❤️ pic.twitter.com/h4uUTqx11F
— Sjoerd Marijne (@SjoerdMarijne) August 2, 2021
அடுத்ததாக ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, வலுவான அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது. ஏனெனில், ஜெர்மனியை 3-0 என்று அர்ஜெண்டினா வீழ்த்தியுள்ளது. ஆகையால், அரையிறுதிப்போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.