'நான் திருநங்கையாக மாறிவிட்டேன்'... 'ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய WWE சூப்பர் ஸ்டார்'... 'என் மனசுல இருந்த காரணம்'... இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக WWE மல்யுத்த போட்டிகள் இருந்து வருகிறது. இதற்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 90களில் வளர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் பங்குபெறும் வீரர்களை தங்களின் ஆஸ்தான ஹீரோவாக பலரும் கருதினார்கள்.
அந்தவகையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை WWE போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தவர் தான் கேபி டஃப்ட். அவரின் டிரேட் மார்க் ஷாட்டான பர்னிங் ஹேமர் (Burning Hammer) மூலம் எதிராளிகளை நிலைகுலைய வைப்பதில் வல்லவராக இருந்ததால், குறுகிய காலத்திலேயே அவருக்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இதனிடையே 2012-ம் ஆண்டுக்குப் பிறகு WWE நிகழ்ச்சிகளில் நடைபெறும் சிறப்பு மல்யுத்த போட்டிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்த அவர், தனது குடும்ப வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட ஆரம்பித்தார். அவருக்கு ஒரு மனைவியும் மகளும் இருக்கும் நிலையில், மல்யுத்த போட்டிகளைக் கடந்து பிட்னஸ் பயிற்சியாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சிறந்த மோட்டார் ரேசராகவும் இருந்து வந்தார்.
சில காலம் திரை வெளிச்சத்திலிருந்து விலகி இருந்த அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், ''தான் திருநங்கையாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள கேபி, கடந்த 8 மாதங்கள் தன் வாழ்நாளில் மிகவும் இருண்ட காலம் என தெரிவித்துள்ளார். தன்னுடைய முடிவை மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
தான் திருநங்கையாக இருந்துகொண்டு, அதனை வெளிப்படுத்த முடியாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் தவித்தாக தெரிவித்துள்ள அவர், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை புறந்தள்ளி, தற்போது நான் நானாக இருக்கிறேன் என கூறியுள்ளார். இன்றிலிருந்து நான் ஒரு மகிழ்ச்சியாகப் பெண் எனத் தெரிவித்துள்ள கேபி டஃப்ட் (Gabbi Tuft), தன்னுடைய வாழ்க்கையை வாழத் தயாராகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ள டஃப்ட், திருமண நாள் மற்றும் குழந்தை பிறந்த நாட்களுக்கு அடுத்தபடியாக, மறக்க முடியாத நாட்களில் இதுவும் ஒன்று எனக் கூறியுள்ளார். இதனிடையே கேபி டஃப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களால் இயன்ற அளவு LGBTQ குழுவினருக்கு உதவிகள் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளனர்.