‘மூன்றாம் பாலினத்தவருக்காக முதல்முறையாக..’ சென்னையில் தொடங்கி வைத்த அமைச்சர்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 03, 2019 03:55 PM
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
மருத்துவ மையத்தை திறந்து வைத்து அதைப் பார்வையிட்ட அமைச்சர், மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதிமொழியையும் மருத்துவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டார். இந்த மையம் பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளைப் போலவே அரசு மருத்துவமனைகளில் எந்தவித தயக்கமுமின்றி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்குத் தேவையான பாலின மாற்று சிகிச்சைகள் வழங்குவதே இந்த மையத்தின் நோக்கம். இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அரசு பொது மருத்துவமனைகளில் 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 பேருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 1.34 கோடி மதிப்பில் பாலின மாற்று தொடர் சிகிச்சை அளிக்கத் தேவையான கருவிகள் வழங்கப்பட்டு விரைவில் இந்த மையம் மேம்படுத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.