‘இவ்ளோ வெவரமா? யார்ணே நீங்க?’.. திருடச் சென்ற வீட்டில் ‘திருடர்கள் எடுத்த சமயோஜித முடிவு!’.. அடுத்தடுத்து 2 வீடுகளில் 111 சவரன் கொள்ளை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது பீரோவில் உடைத்தால் சத்தம் கேட்டு விடும் என எண்ணி பீரோவை அலேக்காக வெளியே தூக்கி சென்று 111 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது.
கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி என்பவரது வீட்டில் அனைவரும் வரண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாத்ரூம் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தலை வாசலை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தனர். அங்கு பீரோவை சாவி போட்டு திறந்து 74 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு சமையல் அறை ஜன்னலை கடப்பாரையால் பெயர்த்து அங்கிருந்து வெளியேறினர்,
அதே ஊரில், அருகாமையில் உள்ள பேராசிரியர் ராம்குமார் என்பவர் குடும்பத்துடன் ஏசி அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாத்ரூம் ஜன்னல் வழியே புகுந்த கொள்ளையர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைக்க முயற்சித்து ஆனால், உடைத்தால் சத்தம் கேட்டு விடும் என பயந்து பின்பக்க கதவு வழியாக பீரோவை அலேக்காக தூக்கிச் சென்றுள்ளனர்.
வீட்டின் பின்புறம் உள்ள வயலில் வைத்து 37 சவரன் நகைகள் மற்றும் 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது அனைவரும் அதிர்ந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.