சினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்!'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!!...
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்ரீபெரும்புதூரில் இருந்து கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாரான 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரி கடந்த ஆகஸ்ட் 26 தேதியன்று ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு லாரியில் வந்து இடைமறித்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி ஓட்டுனரை மிரட்டி, மொத்த செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த சிலர் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக தேவாஸுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடத்திய விசாரணையில், அங்குள்ள கஞ்சர்பட்ஸ் எனும் கொள்ளைக் கும்பல் மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் பூட்டை உடைத்து நுழைந்து, அதிலுள்ள பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பலை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவர்களுடைய வங்கிப் பரிவர்த்தனைகளை ஆராய்ந்து விசாரித்ததன் மூலம், செல்போன்களை கொள்ளையடித்தது கஞ்சர்பட்ஸ் கும்பல் தான் எனவும், சாஃப்ட்வேர் இன்ஜினியரான ராம் காட் என்பவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த கொள்ளை நடந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு கடப்பா, பெல்லாரி வழியாக அவர்கள் மகாராஷ்டிராவை அடைந்ததும் போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம் காட், ரோஹித் ஜல்லா, அங்கித் ஜான்ஜா ஆகிய கொள்ளையர்களை கைது செய்த போலீசார், புனேவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் இதில் தொடர்புடைய 10க்கும் அதிகமானவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
