“காட்டியும் கொடுக்கும் பேஸ்புக்!” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கஞ்சா விற்பனையை ஒழிக்கவும், கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு சுற்றிவளைக்கவும் பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கஞ்சா வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கண்டெய்னர் லாரிக்குள் பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை அண்மையில் போலீஸார் கைப்பற்றினர். அவர்கள் மூலமாக சென்னையில் யார் யாருக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினரின் இந்த விசாரணையில் வடசென்னை, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் சில பெண்கள் பயணிகள் போல் அமர்ந்து கொண்டு எளிதாக கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த ஆட்டோவை காயலான் கடையில் பிரித்து போடப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. பின்னர் அந்த ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்த போதும் தற்போதைய உரிமையாளர் குறித்த தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த எண் கொண்ட ஆட்டோவின் பின் பக்க படம் முகநூலில் இருந்ததை அடுத்து, அந்த படத்தை பதிவிட்டவர் யார் என்று விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த குடுமி மணி என்பதும் அவர்தான் தனது மனைவிகளை ஆட்டோவில் பயணிகள் போல் அமரவைத்து போலீசாருக்கு சந்தேகம் உண்டாக்காத வகையில் கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பொட்டலம் காசி, அவனது மனைவி, கஞ்சா விற்கும் ஏஜென்டுகள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். ஆட்டோவும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சென்னையில் 1,685 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
