VIDEO: ஆதரவு கொடுக்கவேண்டிய ‘நீங்களே’ இப்டி செஞ்சா.. இனி ‘யாருகிட்ட’ போய் சொல்றது.. மனதை உலுக்கிய ‘கண்ணீர்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரியாணி விற்று பிழைப்பு நடத்தி வந்த திருநங்கையின் கடையை சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் திருநங்கை ஸஜனா ஷஜி மற்றும் அவரது நண்பர்கள் சாலை ஓரத்தில் பிரியாணி கடை ஒன்று நடத்தி வந்துள்ளனர். ஒரு பிரியாணி ரூ.60-க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர் ஸஜனா மற்றும் அவரது நண்பர்களிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஸஜனா வெளியிட்ட வீடியோ ஒன்றை மலையாள நடிகர் பஹத் பாசில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘பிரியாணி வியாபாரம் தொடங்கியபோது நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் இப்போது மொத்த பிரியாணியும் விற்காமல் திரும்பக் கொண்டு வந்துள்ளேன். கொஞ்ச நாள்களாக சிலர் எங்களை பயங்கரமாக டார்ச்சர் செய்கிறார்கள். எங்களை வியாபாரம் செய்ய விடாம தடுக்குறாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்தோம். ஆனா அவங்க அதை எடுக்கல. இப்போ என்ன செய்யறதுன்னே தெரியல. கையில் இருந்த காச வச்சு சின்னதா இந்த பிரியாணிக் கடையை ஆரம்பிச்சோம்.
வியாபாரம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. இப்ப இவங்க பிரச்சனை செய்றதுனால எல்லா பிரியாணியும் விற்காம இருக்குது. நான் யாருகிட்டே போய் சொல்லுவேன்? எங்களுக்கு ஆதரவா யாரும் இல்ல. சமூகத்தில அந்தஸ்தா ஒரு வேலை செய்து வாழனும்னு நினைக்கிறோம். ராத்திரி நேரத்துல தெருவிலயும், ரயில்லயும் பிச்சை எடுக்கும்போது, வேலை செய்து பிழைக்கக்கூடாதான்னு நீங்க எல்லாம் கேட்பீங்கதானே? ஆனா இப்போ வேலை செய்து பிழைக்கவிடாம தடுத்தா நாங்க என்ன பண்ணுவோம்? நாங்க நாலைஞ்சு திருநங்கைகள்தான் இருக்கிறோம். யாருகிட்ட போய் சொல்லுவோம்?’ என கண்கலங்க தெரிவித்தார்.
இதனை அறிந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதில், ‘ஸஜனாவுக்கு நடந்த விஷயங்களை கேள்விப்பட்டேன். அவரை போனில் தொடர்புகொண்டு பேசினேன். தேவையான உதவியும், பாதுகாப்பும் வழங்குவதாக உறுதி கூறினேன். திருநங்கைகள் ஆண், பெண்ணுக்கு சமமான குடிமக்கள்தான். இந்த அரசு திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கியது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஸஜனா மற்றும் அவரது நண்பர்களை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் சொந்தமாக தொழில்செய்து சமூகத்தில் மரியாதையுடன் வாழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து மலையாள நடிகர் ஜெயசூர்யா ஸஜனாவுக்காக ஒரு உணவகத்தை கட்டித்தர முன்வந்துள்ளார். அதேபோல் மலப்புரத்தை சேர்ந்த சமூக சேவர் நாசர் மனு என்பவர் அவர்களுக்கு வீடு கொடுத்து உதவியுள்ளார். நம்பை போல திருநங்கைகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் மனம் உண்டு, நாம்தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர கிண்டல் செய்து அவர்களை ஒதுக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.