உண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா?.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபடும் தலமாக இருந்து வருகிறது.
நேற்றிரவு வழக்கம் போல கோயிலை மூடிவிட்டுச் சென்ற நிர்வாகிகள், இன்று அதிகாலை திறந்த போது உள்ளேயிருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், கொரோனா தொற்று நோய் பரவுதல் காரணமாக மூடியிருந்த கோயிலைத் திறந்து, உண்டியல் பணத்தை எடுத்து விட்டோம் என்றும், இரண்டு உண்டியல்களிலும் ரூ. 1 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்க வாய்ப்பு என்று என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருவான்மியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன், உண்டியல்களை இரும்புக்கம்பி கொண்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
மேலும், உண்டியலை உடைப்பதற்கு முன் ஒரு ரூபாய் நாணயத்தைக் காணிக்கையாகவும் அந்த திருடன் உண்டியலில் போடுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.
மருந்தீஸ்வரர் கோயிலின் மதிற்சுவர்கள் மிக உயரமாக இருக்கும். ஆனால், கோயில் மதிலின் ஒருபுறத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து எப்போதும் காணப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் குடியிருப்பு உள்ளதால், அவற்றின் வழியாக மேல் ஏறி கோயிலுக்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.