பொங்கலுக்கு மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அமைச்சர் தெளிவான விளக்கம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி.

தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்ட போது தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினார். சென்னை முதல் குமரி வரையில் இந்தப் போராட்டம் பெரும் எழுச்சி உடன் நடைபெற்றது.
இளைஞர்களின் மாபெரும் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாடு அரசின் சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில், “ஒமைக்ரான் என்னும் வைரஸ் தாக்குதலால் நாடே பதற்ற சூழலில் பெரும் போராட்டத்துக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் அத்தியாவசியமற்ற ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பொதுமக்களை கொடி நோய் பரவலில் இருந்து காப்பாற்றவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிகட்டுக்கு இந்த ஆண்டு அனுமதி தரக்கூடாது” என பீட்டா சிஇஓ மணிலால் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இத்தகைய சூழலில் இன்று மதுரையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "வரும் பொங்கல் பண்டிகையின் போது கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆனால், கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் உடன் மட்டுமே போட்டி நடத்தப்படும்.
கொரோனா பரவலைத் தடுக்க பொங்கல் சமயத்தில் உள்ள சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
