பொங்கல் பரிசு... '24 மணி நேரத்தில் மாறியது...' 'புதிய' சுற்றறிக்கை வெளியீடு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பரிசில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டும் நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ரொக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த சூழலில் தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய ஏதுவாக அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளுக்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும். ஒரே தவணையில் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். விற்பனை முனைய கருவிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்களின் விநியோகத்திற்கு வாகனங்களும், சுமை தூக்கும் ஊழியர்களும் போதிய அளவில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மேலும், ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்றவாறு கூடுதல் ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலரை நியமித்து, எவ்வித புகாரும் இல்லாமல் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், 1000 கார்டுகள் வரை உள்ள கடைகளில் 2 ஊழியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள கடைகளில் 3 ஊழியர்களும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகுப்பை சிறப்பாக விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர், வாணிப கழக மண்டல மேலாளர், வேளாண் துறை இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசில் 'ரொக்கப்பணம்' என்ற வார்த்தையை நீக்கி கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் என இருந்தது. தற்போது வந்துள்ள புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.