டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற "#வேடந்தாங்கலைப்_பாதுகாப்போம்" பின்னணி என்ன?.. சூழலியாளர்கள் கடும் தாக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 08, 2020 05:09 PM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பு வளைய பரப்பை சுருக்குவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், "சன் பாராமட்டிக்கல்ஸ்" என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் லாப நோக்குக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

tn govt writes to centre for changing norms in vedanthangal

சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் கனடா, சைபீரியா, வங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த சரணாலயம் பறவைகள் வந்து செல்லும் இடமாக மட்டுமல்லாது, சூழலியல் கல்வி பயில்வோருக்கு பயிற்சிக் கூடமாக உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பறவைகள் குறித்து அறிய வேண்டுமானால், இங்கு தான் வந்து செல்கின்றனர். 30 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது.

இந்த பரப்புக்குள் தொழிற்சாலைகளோ, மின் கோபுரமோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ அமைக்கப்படக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சரணாலயத்தின் எல்லைகளை மறுவரையறை செய்யுமாறு வனத்துறையிடமிருந்து வந்த முன்மொழிவுக்கு, வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய வனவிலங்குகள் வாரியத்துக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதனால் பல்வகை உயிர்களின் பாதுகாப்புக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சரணாலயத்தின் பாதுகாப்புப் பரப்பை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இயங்கி வரும் "சன் பாராமட்டிக்கல்ஸ்" என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காகவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதங்கங்கள் ஒரு புறம் இருக்க,"வேடந்தாங்கலைப் பாதுகாப்போம்" என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக்கி, இயற்கை ஆர்வலர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு சில மணி நேரங்களில் இந்த ஹேஷ்டெக் 7 ஆயிரத்து 700 முறை பகிரப்பட்டு, டிரெண்டிங்கில் 3ஆம் இடத்தைப் பிடித்தது. ஏற்கனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்து வருவதாகக் கூறும் அவர்கள், அதன் பாதுகாப்பு வளையப் பரப்பு சுருக்கப்பட்டால் அது மேலும் பல கேடுகளை விளைவிக்கும் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் உயிர்ச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn govt writes to centre for changing norms in vedanthangal | Tamil Nadu News.