'இதுனால தான் சென்னையில வைரஸ் வேகமா பரவுது!'.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 05, 2020 07:01 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவரித்துள்ளார்.

tamil nadu cm edappadi palaniswamy press meet on covid19

கொரோனா வைரஸ் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நோய் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நோய் பரவலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனா தடுப்பு பணிக்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 அதிகாரிகளுக்கும் உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை மாநகர மக்கள் தொடர்பு கொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் சென்னையில் மக்கள் இருக்கும் இடங்களுக்கே நேரிடையாக செல்கிறது.

அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதால் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கமே சென்னையில் கொரோனா வேகமாகப் பரவக் காரணமாகும். அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால், சென்னையில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.

வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. நாள் தோறும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். எப்போது ரயில் இயக்கப்படும் என்ற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்.

வெளியில் சென்றால் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்களுக்கு ஜூன் மாதமும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.