பயங்கர இருட்டு...! துப்பாக்கி சத்தம்...! 'என்ன நடக்குதுன்னு திரும்புறதுக்குள்ள...' 'பாய்ந்த குண்டுகள்...' - கடைசியில் செல்போன் செய்த டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தி.மு.க கிளை செயலாளரை நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது, அவர் நெஞ்சருகே வைக்கப்பட்டிருந்த செல்போன் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிப் பகுதியில் உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (50). விவசாயியான இவர் அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், குணசேகரன் (21), ஞானசேகரன் (18) என்ற மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் பெங்களூருவில் வேலை செய்து வருவதால், வேலாயுதமும் தாமரை செல்வி மட்டுமே தன் கிராமத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலாயுதம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருக்கும் வேலாயுதத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் வேலாயுதம் வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் போது மர்ம நபர்கள் இருவரும் நாட்டு துப்பாக்கியால் அவரை சுட முயன்றுள்ளனர். இருட்டில் சத்தம் கேட்டு திரும்பிய வேலாயுதத்தின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் தலா ஒரு குண்டு பாய்ந்திருந்தது. மார்பை நோக்கி சீறிப்பாய்ந்த இரு குண்டுகள் அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனில் பட்டதால், குண்டானது அவரின் மார்பு பகுதிக்குச் செல்லவில்லை.
மேலும் காயமடைந்த வேலாயுதம் அவர்களை முதலில் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியில் தி.மு.க. கிளை செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மார்புப் பகுதிக்கு பாய்ந்த குண்டு செல்போன் உதவியால் அவரின் உடலின் உள்ளே செல்லாததால் வேலாயுதம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.