“சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்!”.. அமெரிக்காவில் நீச்சல் குளம் அருகே நடந்த பயங்கர சம்பவம்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கேரி நகரில் வசித்துவந்த அமெரிக்கத் தமிழர் 55 வயதான செல்வராஜு வெள்ளியங்கிரி, வீட்டிற்கு அருகே உள்ள நீச்சல் குளத்தின் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

செல்வராஜு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த சம்பவத்தில் செல்வராஜு வெள்ளியங்கிரியை துப்பாக்கியால் சுட்டவர் யார் என்கிற விவரம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து பேசிய நகர காவல்துறை அதிகாரி கேத்தரின் கிறிஸ்டியன் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பேசிய கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், ‘விசாரணை’ திரைப்பட நாவலாசிரியருமான மு. சந்திரகுமார், “என் நண்பர் தங்கம் மூலமாக அறிமுகமாகிய செல்வராசு சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை ஹோப்ஸ் ஆட்டோ ஸ்டேண்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார். என்றும் நினைவுகளில் நீடிப்பவர். அவருக்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்கான காரணங்களைத் தேடும் அதே சமயம் அமெரிக்கக் காவல் துறை குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஏதேனும் சில வழிகளில் நாம் முயற்சிக்க வேண்டும். அதில் ஒன்று தமிழக அரசை தூதரகத் தொடர்புகொண்டு சிறப்புக் கவனம் எடுக்கச்செய்வது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மிடையே பேசிய கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகேசுகுமார், “கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு வெள்ளியங்கிரி. 1989-90 காலகட்டத்தில் எனக்கு நண்பரானவர். அமெரிக்காவில் வடக்குக் கரோலினா மாகாணத்தில் கேரி என்ற பகுதியில் தன் மனைவி கலைச் செல்வி மற்றும் 13 வயது மகள் ஆனந்தியுடன் வசித்து வந்தார். அந்நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் செல்வராசுவும் அவர் மனைவியும் தமிழ்ப் பணியையும் செவ்வனே செய்து வந்தனர். அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகள் படிப்பதற்காக நிறைய தமிழ் நூல்களை ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் வாங்கிச் செல்வார். அவரது இழப்பு அக்குடும்பத்திற்கும், அவர் நண்பர்களுக்கும் பேரிழப்புதான்” என்று வருந்தினார்.
மேலும் பேசிய மகேசுகுமார், “வடக்குக் கரோலினா மாகாணத்திலுள்ள தமிழ்ச் சங்க நண்பர்கள் செல்வராசு படுகொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவர் மனைவி கலைச் செல்விக்கும்,மகள் ஆனந்திக்கும் ஆறுதல் கூறி, உடன் இருந்து சட்ட முறைகளைக் கவனித்து வருகிறார்கள். வடக்கு கரோலினா மாகாண தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் அன்பிற்கும்,உறுதுணைக்கும நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
