“மிரளவைத்த 8 தோட்டாக்கள்!”.. ‘திருடிய’ பின்பு ‘கொள்ளை’ கும்பல் எடுத்த ‘திடீர்’ முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டு உரிமையாளரை தாக்கி டிவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பல் அவற்றை பங்கிடும் போது துப்பாக்கி தோட்டா இருந்ததால் பயந்து போய் அவற்றையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த விஜய் என்பவர் மது அருந்திவிட்டு தனது வீட்டைப் பூட்டாமல் அப்படியே உறங்க சென்றதாக கூறப்படும் நிலையில், வழக்கமாக அவரை பின்தொடர்ந்த சிலர் அதேபோல் அன்றும் அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து அவர் போதையில் உறங்கச் சென்ற பின்னர் இவருடைய வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் விஜய்யை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த டிவி மிக்ஸி உள்ளிட்ட பொருட்களையும் பீரோவில் இருந்த செல்லாத பணம் உள்ளிட்ட பொருட்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
சிறிது தூரம் தள்ளிச் சென்று சில்லறைப் பட்டறை ஒன்றில் ஒன்றில் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பங்கு பிரித்துள்ளனர். அப்படி பங்கு பிரிக்கும் போது பீரோவில் இருந்து எடுத்த பெட்டி ஒன்றை திறந்து பார்த்துள்ளனர். அதில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த கொள்ளை கும்பல், “இது ஏதோ ஒரு விவகாரமான பிரச்சினையாக இருக்குமோ?” என்று பயந்து தோட்டாக்களுடன் தாங்கள் திருடிய பொருட்கள் அனைத்தையும் அங்கேயே போட்டு விட்டு அலறி அடித்து தப்பி ஓடியுள்ளனர்.
அதன் பின்னர் மதியம் பட்டறைக்கு வந்த சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் தோட்டாக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் போலிஸார் வந்து விசாரிக்கும் போதுதான் விஜய் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து விஜய்யின் தந்தை தொழிலதிபர் துரை என்பதும், அவர் துப்பாக்கி வைப்பதற்காக உரிமம் வைத்திருந்ததும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்த நிலையில் 2013 ஜூன் 23-ம் தேதி அவரது துப்பாக்கியை போலீஸாரிடம் விஜய் ஒப்படைத்திருந்ததும் தெரியவந்தது.
ஆனால் அந்த துப்பாக்கிக்காக வாங்கப்பட்ட 10 தோட்டாக்களை அவரது தந்தையின் நினைவாக விஜய் வீட்டிலேயே வைத்து இருந்துள்ளார். அதை உறுதி செய்த போலீசார், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற 8 தோட்டாக்கள் மற்றும் விஜய் வீட்டில் வைத்திருந்த 2 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கொள்ளையடிக்க வந்த கும்பல் பற்றிய விசாரணையை ஒருபுறம் போலீசார் தொடர்ந்துள்ளதோடு, சட்டவிரோதமாக தோட்டாக்களை வைத்திருந்தது தொடர்பாக விஜயையும் விசாரணை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
